பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை சுவாமி தரிசனம் செய்து பெருமாளை வழிப்பட்டனர்.விருதுநகரில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ராமர் கோயில், ரெங்கநாத சுவாமி கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல மாலையில் துவங்கி குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பெருமாளை தரிசித்தனர்.* ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி வார உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் தென்திருப்பதி என அழைக்கப்படும் இந்த கோயிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். சுப்ரபாதம் பூஜை சிறப்பு திருமஞ்சனம் முடிந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசனம் செய்தனர். மாலையில் கருடாழ்வார் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலை துறை அலுவலர்கள் செய்திருந்தனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.. டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதேபோல் செண்பகத் தோப்பு காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 8:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள், சுந்தரவல்லி, சௌந்தரவல்லி தாயார்களை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.