பாதாள சாக்கடை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டதா --ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் கேள்வி
ராஜபாளையம்: பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் நகராட்சியிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டு விட்டதா தற்போது நடைபெறும் பராமரிப்பு செலவுகள் யார் பொறுப்பு என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.ராஜபாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. கமிஷனர் நாகராஜ், துணைத் தலைவர் கல்பனா, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் ராதா,(தி.மு.க.,): பச்சமடம் பகுதியில் மூன்று தெருக்கள் புதிதாக ரோடு போடாமல் வைத்துள்ளனர். கோரிக்கை வைத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.பவித்ரா, நகராட்சித் தலைவர்: பேவர் பிளாக் தெரு ஒதுக்கீட்டை தார் சாலையாக மாற்றி கேட்டுள்ளதால் இத்தாமதம். சென்னைக்கு சென்று அதிகாரியிடம் முறையிட்டுள்ளேன். விரைவில் பணிகள் தொடங்கும்.ரா. சங்கர் கணேஷ், (காங்.,): பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் திட்டம், பணிகள் நகராட்சியிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டு விட்டதா. தற்போது நடைபெறும் பராமரிப்பு செலவுகள் யார் பொறுப்பு. நாகராஜன், கமிஷனர்: 15 பிளாக்குகளில் 9 வரை சோதனை பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது வரை அழுத்தம் தாங்குவதற்கான தொடர் சோதனை பராமரிப்பு நடந்து வருகிறது. அனைத்தும் முடிந்தபின் நகராட்சி பொறுப்பு ஏற்கும். ராஜ், (தி.மு.க.,): தெருவில் பேவர் பிளாக் பதிக்க செல்லும் போது தார் ரோடு வேண்டும் என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலிலேயே ஆய்வு செய்தால் இப்பிரச்சினை ஏற்படாது. பவித்ரா, நகராட்சி தலைவர்: நகராட்சி கவுன்சிலுக்கு முன்பே இவை முடிவு செய்யப்பட்டுள்ளதால் மாற்றுவது கடினம். புதிதாக ஒதுக்கும்போது ஆலோசிக்கப்படும்.ராதாகிருஷ்ண ராஜா, (தி.மு.க.,): நகர் நடுப்பகுதி செல்லும் ஓடைகள் துார்வார வில்லை. சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது. மற்ற பகுதிகளில் நடக்கும் போது இதையும் சரி செய்ய வேண்டும்.சக்திவேல், சுகாதார அலுவலர்: பொதுப்பணித்துறை சாக்கடை பாலம் போட்டுள்ளதாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் துார்வாரும் வாகனங்கள் உள் நுழைய முடியவில்லை. மழைக்கான அவசர பணிகள் மட்டும் நடைபெறுகிறது. ஞானவேல், (தி.மு.க.,): தாமிரபரணி குடிநீர் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படாத போது பராமரிப்பு பணி என ஆட்களை ஒதுக்குவது ஏன். இந்த செலவினங்களுக்கு யார் பொறுப்பு.முகமது ஷரீப், இன்ஜினியர்: நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவசரத்திற்கு ஆட்கள் ஒதுக்கப்படுகிறது. இனி நடைபெறாது. ஏ.டி.சங்கர் கணேஷ், (காங்): மின் மயான பணிகள் தாமதத்திற்கு காரணம் என்ன. விரைவு படுத்த வேண்டும். அழகர்சாமி, மின் அலுவலர்: உயர் மின் அழுத்த இணைப்புக்காக மின்வாரியத்தினரின் பணி நிலுவையில் உள்ளது. முடிந்தவுடன் நடைமுறைக்கு வரும். சோலைமலை, (அ.தி.மு.க.,): எனது வார்டில் பள்ளமான பகுதிகளில் மட்டும் தாமிரபரணி குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். 80 சதவீதத்தினருக்கு சப்ளை கிடைக்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. 147 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.