காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஐந்து நகராட்சி, 9 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 ஊராட்சிகள் உள்ளது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் மாவட்டத்தில் வளர்ந்து வரும் உள்ளாட்சி அமைப்புகளாக காரியாபட்டி, மல்லாங்கிணறு, சேத்தூர், செட்டியார்பட்டி, மம்சாபுரம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கொடிக்குளம் பேரூராட்சிகள் உள்ளது. இந்தப் பேரூராட்சிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் அடிக்கடி செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு செயல் அலுவலரும் 2 பேரூராட்சிகளில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.அதிலும் அருகருகே உள்ள இரண்டு பேரூராட்சிகளுக்கு கூடுதல் பணி வழங்கப்படாமல் தொலைதூர பேரூராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது மாவட்டத்தில் கொடிக்குளம், வத்திராயிருப்பு பேரூராட்சிகளுக்கு ஒரு செயல் அலுவலரும், சுந்தரபாண்டியம், செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு ஒரு செயல் அலுவலரும் பணியாற்றி வருகின்றனர். இதனால் அந்தந்த பேரூராட்சி பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எந்த நாளில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு வருவார் என தெரியாத நிலை காணப்படுகிறது.அதிலும் வாரத்தில் உள்ள ஐந்து வேலை நாட்களில் ஒரு நாள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கும், இன்னொரு நாள் மதுரை பேரூராட்சி துணை இயக்குனர் அலுவலகத்திற்கும் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் சென்று விடுவதால் மக்கள் நேரடியாக அவர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது.இதனால் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பேரூராட்சியிலும் தினசரி அடிப்படை பணிகள் நடப்பதை கண்காணிக்க முடியாமலும், வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய முடியாமலும் அதிகாரிகள் உள்ளனர். இதனால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.எனவே, மாவட்டத்தில் காலியாக உள்ள பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்பவும், செயல் அலுவலர்கள் வேலை நாட்கள் தோறும் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பேருராட்சி அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.