உள்குத்தகைக்கு விடப்படும் நகராட்சி கடைகளால் வருவாய் இழப்பு
விருதுநகர் நகராட்சியில் மீன்மார்க்கெட் 33 கடைகள், 2 கோடவுன்கள், கச்சேரி ரோட்டில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகம், புல்லலக்கோட்டை ரோடு வணிக வளாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் வெளிப்புறம், உட்புறங்களில் கடைகள், வணிக வளாகங்கள், புது பஸ் ஸ்டாண்டில் உட்புறங்களில் கடைகள், பஜார் தெப்பம் பகுதியில் 2 கடைகள், சவுந்தரபாண்டியன் ரோடு, விஸ்வநாததாஸ் காலனி, கீழக்கடை தெருவில் 3 கடைகள் என 216கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு கடை ஒன்பது ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்படும்.இந்த கடைகளின் மூலம் வணிகர்கள், வியாபாரிகள் பயன்பெறுவர் என்ற நோக்கத்தில் நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டது. இதன் மூலம் வரும் வருவாயும் நகராட்சிக்கு உதவிகரமாக இருக்கும். அரசியல், பண பின்புலம் உள்ள நகராட்சி கடைகளை பெற்றவர்கள், இதை மற்றவர்களுக்கு உள்குத்தகைக்கு விடுகின்றனர்.ஒரே கடையை இரண்டாக பிரித்து வாடகைக்கு விடுவது, வெளியே ஆக்கிரமித்து சாலை வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடுவது போன்ற அத்துமீறல்கள் விருதுநகரில் சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது. 80 சதவீதம் உள்குத்தகை உள்ளது.பொது ஏலமாக நடத்துவது போல் நடத்தினாலும், அரசியல் சூழ்ச்சிகள் செய்து சாதாரண வியாபாரிகளுக்கு கிடைக்கவிடாமல் செய்து விடுகின்றனர். நகராட்சி கடையை குத்தகைக்கு எடுத்து விட்டால் வாரிசுதாரர்கள் பயன்படுத்தும் அளவுக்கு ஒரு சிலரே வெகு காலமாக ஆக்கிரமிக்கின்றனர்.இதே போல்நகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களை குத்தகைக்கு விட்டுள்ளனர். ஆனால் காலியிடங்களை குத்தகைக்கு விட அனுமதியில்லை. மிக மிக குறைவான வாடகையில் விட்டுள்ளனர். நகராட்சியின் வருவாய் பிரிவும் எதையும் கண்டுக்காமல் குறட்டை விடுகிறது. நகராட்சியில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது.ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பூங்காவை வணிக கடைகள் கபளீரகம் செய்து விட்டன. உள் குத்தகைகளை சரி செய்து வருவாய் இழப்பை தடுக்க நகராட்சி வருவாய் பிரிவினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.