உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தெருக்களில் ரோடு சேதம், செயல்படாத சுகாதார வளாகம்

தெருக்களில் ரோடு சேதம், செயல்படாத சுகாதார வளாகம்

சிவகாசி:தெருக்களில் ரோடு சேதம், செயல்படாத சுகாதார வளாகம், குடிநீர் பற்றாக்குறை என சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு தட்டாவூரணி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு தட்டாவூரணி பகுதியில் தெருக்களில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. இங்குள்ள அனைத்து தெருக்களிலுமே ரோடு அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அனைத்து தெருக்களிலும் வாறுகால் துார்வாரவில்லை. இதனால் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு சுகாதார கேட்டையும் ஏற்படுத்துகிறது. இப்பகுதியில் நடமாடும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தட்டாவூரணியிலிருந்து விளாம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் கொட்டிக் கிடக்கும் மணல்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எஸ்.காளிராஜ், ஆட்டோ டிரைவர்: இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது. சமீபத்தில் குழாய் வழியாக உப்பு தண்ணீர் மட்டும் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டது. குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் மாநகராட்சி வாகனம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்தத் தண்ணீர் அனைவருக்கும் போதவில்லை. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கிலி, ஆட்டோ டிரைவர்: இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள இரு சுகாதார வளாகங்களும் சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது வீணாக உள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுகாதார வளாகத்தில் தண்ணீர் மின்சார வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எல்.காளிராஜ், ஆப்செட் தொழிலாளி: இங்குள்ள அனைத்து தெருக்களிலுமே ரோடு சேதம் அடைந்துள்ளது. மழைக்காலங்களில் நடந்து செல்ல கூட வழியில்லை. வாறுகால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றது. மெயின் ரோட்டில் வாறுகால் துார்வாரப்படாததால் மழைநீர் முழங்கால் அளவிற்கு ரோட்டில் தேங்கி விடுகின்றது. எனவே ரோடு வாறுகாலை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை