உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் 15 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்

சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் 15 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்

சத்திரப்பட்டி:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள், சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் இடையே கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் 15 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.இம்மாவட்டத்தில் சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், சமுசிகாபுரம் பகுதிகளில் மருத்துவத்துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மூலம் கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதால் தொழிலாளர்களுக்கு கடந்த முறை போடப்பட்ட அதே ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிய கூலி உயர்வை உற்பத்தியாளர்கள் தர மறுத்ததால் மே 12 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்தது.இதுகுறித்து விருதுநகர் தொழிலாளர் நலத்துறை, ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் 5 கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.நேற்று மருத்துவத்துறை உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் கேட்ட கூலி உயர்வை உற்பத்தியாளர்கள் தர ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கான புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இன்று முதல் சத்திரப்பட்டி வட்டாரத்தில் உள்ள 5 ஆயிரம் விசைத்தறிகளும் செயல்பட தொடங்கும் என்பதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி