சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு படு ஜோர் கண்துடைப்பாக மாறிய ஆய்வுகள்
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு திரி பதுக்குவது, தகர செட் அமைத்தும் மற்றும் வீடுகளில் வைத்தும் பட்டாசு தயாரிப்பது படுஜோராக நடக்கிறது. அசம்பாவிதங்கள் நிகழ்ந்த பின் விபத்துக்கு பிந்தைய நடவடிக்கை மட்டும் எடுக்கப்படுகிறது. உயர்அதிகாரிகள் ஆய்வுகள் கண்துடைப்பாக மாறி வருகின்றன. இம்மாவட்டத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், ஆமத்துார், வச்சக்காரப்பட்டி, முதலிப்பட்டி, வாடியூர், வெள்ளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இவற்றை உள்குத்தகை விடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது. ஆனாலும் சிலர் குத்தகை விட்டு வருகின்றனர். கூடுதல் உற்பத்திக்காக குத்தகைதாரர்கள் அதிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். அதிலும் முன் அனுபவம் இல்லாத பலரை அதிக சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு எடுக்கின்றனர். பயிற்சிகள் இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. சட்டவிரோதமாக ஆலை வளாகத்தில் தகரசெட் அமைத்தும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். மூலப்பொருட்களை வீடுகளில் பதுக்கி வைத்து பட்டாசு உற்பத்தியில் குடும்பத்துடன் குடிசைத் தொழில் போல செய்கின்றனர். நேற்று முன்தினம் சாத்துார் அருகே விஜயகரிசல்குளத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த போது நடந்த வெடி விபத்தில் ஜெகதீஷ் 19, முத்துலட்சுமி 70, சண்முகத்தாய் 55, பலியாகினர், மாரியப்பன் காயமடைந்தார். இதையடுத்து எஸ்.பி., கண்ணன் சட்ட விரோத பட்டாசு குறித்து இனி நானே நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார். அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தாலே சட்ட விரோத பட்டாசு தயாரிப்புகளை தடுக்க முடியும். மாவட்ட அலுவலர்கள், போலீசாரின் அலட்சியத்தாலும், தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தும் ஒரு சிலராலும் தொழிலாளர்களை இழக்கும் நிலை தொடர்கிறது. ஆய்வுக்கு 5 குழுக்கள் சென்னை தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் ஆனந்த் பிறப்பித்துள்ள உத்தரவு: பட்டாசு ஆலை விபத்துக்களை தவிர்க்க ஆக., 11 முதல் 30 வரை 3 வாரங்களுக்கு ஆய்வு செய்ய தலா 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருவாய், போலீஸ், தீயணைப்பு அலுவலர்கள் உடன் இணைந்து திடீர் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை முழுமையாக பின்பற்றுதல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் வெடிபொருள் இருப்பு வைத்தல், அதிக தொழிலாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி செய்தல், பெசொ உரிமத்தில் குறிப்பிடப்படாத ரசாயனங்களை பயன்படுத்துதல், குழந்தை தொழிலாளர் முறை, தொழிலாளர்களுக்கான குழு காப்பீடு குறித்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறப் பட்டுள்ளது.