உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை கிடைக்காமல் அவதி

கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை கிடைக்காமல் அவதி

சாத்துார் : சாத்துார், சுற்று கிராமங்களில் மானாவாரி விவசாயிகள் பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை கிடைக்காததால் அவதிப்படுகின்றனர்.சாத்துார் என்.சுப்பையாபுரம், பெத்து ரெட்டி பட்டி, பெரியஓடைப்பட்டி, சிவனந்தபுரம், சின்ன ஓடைப்பட்டி நென்மேனி, என்.மேட்டுப்பட்டி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு (2023-- 2024) மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர்.கடந்தாண்டு காலம் கடந்து பெய்த கனமழை காரணமாக மக்காச்சோள பயிர்கள் நீரில் மூழ்கியும், முளை விட்டும் சேதம் அடைந்தன. கூட்டுறவு சங்கங்களில் மானாவாரி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர்.மக்காச்சோளம் நீரில் மூழ்கி அழுகியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் அவரவர் வங்கி கணக்கில் பயிர் இழப்பீடு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் காப்பீடு செய்திருந்த மானாவாரி விவசாயிகளின் வங்கி கணக்கில் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை இழப்பீடு பணம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் மானாவாரி விவசாயிகள் விரக்தி அடைந்து உள்ளனர்.அடங்கல் மூலமும், நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெற்று விவசாய பணிகளை மேற்கொண்ட மானாவாரி விவசாயிகள் தற்போது வரை இழப்பீடு தொகை கிடைக்காததால் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர்.உதவிவேளாண்மை அலுவலகத்தில் தொடர்பு கொண்டால் உங்கள் வங்கி கணக்கு உள்ள கூட்டுறவு சங்க வங்கிகளில் கேளுங்கள் என்கின்றனர். ஆனால் கூட்டுறவு சங்கம் வங்கியில் கேட்டால் ரூபாய் வரவு ஆகவில்லை என பதில் வருகிறது. இழப்பீடு தொகை கிடைக்காமல் வங்கிக்கும், வேளாண்மை அலுவலகத்திற்கும் அலைவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் விஐயா கூறியதாவது: தற்போது இழப்பீடு தொகை காப்பீட்டு நிறுவனங்களால் பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூபாய் வரவு வைக்கப்படும். கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் அலுவலகத்திற்கு வந்து காப்பீடு செய்த ரசீதை காண்பித்தால் போர்ட்டலில் சரிபார்த்து அவர்கள் கணக்கில் பணம் வந்துள்ளதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.என்றார்.எனினும் தாமதம் இன்றி மானாவாரி விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கணக்கில் ரூபாய் வரவு வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை