உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தவிப்பு l மாவட்டத்தில் குறையும் பால் வரத்து l ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதி

தவிப்பு l மாவட்டத்தில் குறையும் பால் வரத்து l ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்துார்:வெயிலின் தாக்கத்தால் மாடுகளில் பால் சுரப்பு குறைவு, கால்நடை தீவனங்கள்விலை உயர்வால் பொருளாதார நெருக்கடி ஆளாகும் மாடு வளர்ப்பாளர்கள்,ஆவினை விட கூடுதலாக பணம் கொடுத்து வீடு தேடி வந்து தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்து எடுத்துச் செல்வது உட்பட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் ஆவின் நிர்வாகத்திற்கு கிடைக்க வேண்டிய பாலின் அளவு குறைந்துள்ளதால் ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏராளமான விவசாய குடும்பங்களை சேர்ந்த மக்கள் பால் மாடுகள் வளர்த்து வருகின்றனர். தினமும் காலை, மாலை வேலைகளில் பால் கறவை செய்து உள்ளூர் முதல் வெளியூர்களுக்கு பாலை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.இதில் பெரும்பாலான பால் மாடு வளர்ப்பார்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு தினமும் பால் அனுப்பி வந்தனர். இதனை கொள்முதல் செய்யும் சங்கங்கள்,குறிப்பிட்ட அளவு பாலை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள பாலை தங்களது ஊழியர்கள் மூலம் நகரின் பல்வேறு தெருக்களில் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனத்திற்கு கடந்த காலங்களில் அதிகபட்சமாக தினமும் 18 ஆயிரம் லிட்டர் பால் வரத்து இருந்தது. தங்களது விற்பனை போக மீதமுள்ள பாலின ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பல்வேறு பால்கோவா தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆவின் சப்ளை செய்து வந்தது. கடந்த சில மாதங்களாக ஆவினுக்கு18 ஆயிரம் லிட்டருக்கு பதிலாக 12 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே தினசரி அதிகபட்ச வரவாக இருக்கிறது. வெயில் காரணமாக மாடுகளில் பால் சுரப்பு குறைவாக இருப்பதால், தங்களுக்கு பால் வரத்து குறைந்துள்ளதாக ஆவின் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து மாடு வளர்ப்பாளர்கள் கூறுகையில், ஒரு காலத்தில் கிராமங்கள் தோறும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தது. இத்தகைய நிலங்களில் மாடுகள் விடப்பட்டு இயற்கையான புற்களை சாப்பிட்டு அதிக பால் சுரந்தது. ஆனால், தற்போது தவிடு, புண்ணாக்கு போன்ற கால்நடை தீவனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது அதிகஅளவில் பால் மாடுகள்வளர்க்க முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கு மாடு வளர்ப்பாளர்கள் ஆளாகி வருகின்றனர். மேலும் பாலின் தரம் என்ற பெயரில் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கொள்முதல் விலையும்குறைவாக உள்ளது பணவரவும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஆவினுக்கு பால் சப்ளை செய்ய தயக்கம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.அதேநேரம் தனியார் பால் விற்பனை நிறுவனங்கள், போதிய அளவிற்கு களப்பணியாளர்களை நியமித்து பால் உற்பத்தியாளர்களை கிராமங்கள் தோறும் சென்று அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகள் மற்றும் மாட்டு தொழுவம் அமைத்துக் கொடுத்தல் உட்பட பல்வேறு உதவிகள் செய்து, நேரடியாக பாலினை பெற்று செல்கின்றனர். பால் உற்பத்தியாளர்களுக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்துள்ளனர்.இதனால் ஆவினுக்கு பால் சப்ளை செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் ஒரு காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கள் விற்பனை போக மீதமுள்ள பாலினை பால்கோவா உற்பத்தி நிறுவனங்களுக்குதினமும் 3 ஆயிரம் லிட்டர் வரை விற்பனை செய்து வந்த ஆவின் நிறுவனம், தற்போது தினமும் 6 ஆயிரம் லிட்டர் பற்றாக்குறை ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.மாடு வளர்ப்பவர்களிடம் ஒரு லிட்டர் பால் ரூ.33க்கு கொள்முதல்செய்யும் ஆவின் நிறுவனம் பாலின் தரத்தை பொறுத்து ரூ. 45 மற்றும் ரூ. 60 என விற்கின்றனர். கொள்முதல் விலையை அதிகரித்தால் மட்டுமே, ஆவினுக்கு பால் சப்ளை செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போதுதான் மாவட்டத்தில் பால் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும்.இதனை சரி செய்யாத நிலையில் தற்போது மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துதல், மாட்டு தீவனங்களை அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் மாடு வளர்ப்பாளர்களுக்கு விற்பனை செய்தல், கிராமங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்டு, மாடு வளர்ப்பாளர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், பால் மாடு வளர்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் உடனடியாக செய்து தந்தால் மட்டுமே மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு நீங்கும் என மாடு வளர்ப்பார்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ