உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இறுதி கட்ட பட்டாசு உற்பத்தி

சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இறுதி கட்ட பட்டாசு உற்பத்தி

சிவகாசி: தீபாவளிக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இறுதி கட்ட பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடக்கிறது.இம்மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் நேரடியாக மூன்று லட்சம், மறைமுகமாக 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 95 சதவீத பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.இந்நிலையில் 2015 ல் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என தன்னார்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து 2018 ல் உச்ச நீதிமன்றம் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, அதிக ஒலி எழுப்பும் சரவெடி தயாரிக்க கூடாது, பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இம்மாவட்டத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது.தற்போது தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளில் முன்பு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளில் உள்ள காற்று மாசை விட 30 சதவீதம் மாசு குறைவாகவே இருக்கும். பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பதால் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த முடியவில்லை, சரவெடி தயாரிக்க முடியவில்லை. இதனால் 80 சதவீதம் வெரைட்டி பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. 80 சதவீதம் மக்கள் விரும்பும் பட்டாசுகளை கொடுக்க முடியவில்லை.பேரியம் நைட்ரேட் பயன்படுத்த முடியாததால் எல்லோராலும் உபயோகப்படுத்த கூடிய மத்தாப்பு, சாட்டை, பூச்சட்டி சக்கரம் மற்றும் சரவெடி போன்ற பல வகை பட்டாசுகள் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வரும் காலத்தில் புதிய பசுமை பட்டாசு சரவெடிக்கு உற்பத்திக்கு அனுமதி வழங்கவும், குறைந்தளவு பேரியம் நைட்ரேட்டுடன் நுண்துகள்களை குறைக்க கூடிய வேதிபொருளை சேர்த்து பட்டாசு உற்பத்திக்கு அனுமதிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெற்று தர வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.பட்டாசு உற்பத்திக்கு இதுபோன்று பல பிரச்னைகள் வந்தாலும் இப்பகுதியில் பட்டாசு உற்பத்தி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்தாண்டு தீபாவளிக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை