விருதுநகரில் செயல்படாத குப்பை பிரிக்கும் இயந்திரம் வரிப்பணத்தை வீணாக்கும் நகராட்சி நிர்வாகம்
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குப்பை பிரிக்கும் இயந்திரம், பாதசாளசாக்கடை அள்ளும் ரோபோ ஆகியவை காட்சி பொருட்களாகி மக்கள் வரிப்பணம் வீணாகின்றன.விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளில் உள்ள 21 ஆயிரம் வீடுகளில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி துப்புரவு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நகர்ப்பகுதிகளில் 5 இடங்களில் உரக்கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த உரக்கிடங்குகள் அமையும் முன்பே அல்லம்பட்டி குப்பை கிடங்கில் ரூ.1.50 கோடிக்கு குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது.தற்போது வரை அந்த இயந்திரம் செயல்பாட்டிற்கு வரவில்லை. அல்லம்பட்டி குப்பை கிடங்கில் பாலிதீன், இரும்பு, காகித, காய்கறி குப்பைகள் ஒன்றாகவே கொட்டப்படுகின்றன. இதே போல் 2020 டிசம்பரில் பாதாளசாக்கடை இணைப்புகளில் உள்ள அடைப்பை சரி செய்ய ரோபோட் இயந்திரம் ஒன்றை ரூ.45 லட்சத்தில் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து விருதுநகர் நகராட்சி வாங்கியது. இதுவும் தற்போது வரை செயல்பாட்டில் இல்லை. இந்த இயந்திரத்தை இதுவரை பாதாளசாக்கடை சீரமைப்பு பணிக்கே பயன்படுத்தியது கிடையாது. தற்போது அது நகராட்சியில் எங்கு உள்ளது என்றும் தெரியவில்லை.வளர்ச்சி திட்டம் எனும் பெயரில் நகராட்சி அதிகாரிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுகின்றனர். இதனால் வீணாவது மக்கள் வரிப்பணம் தான். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு திடக்கழிவு மேலாண்மைக்கு கொண்டு வரப்பட்ட குப்பை பிரிக்கும் இயந்திரமும், மனித கழிவை மனிதனே அள்ளும் நிலைய தவிர்க்க உதவும் ரோபோட் இயந்திரமும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.