உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பதவி முடிந்த நிலையில் அத்தியாவசிய பணிகள் சுணக்கம்! குடிநீர் வினியோகத்திற்காக பரிதவிக்கும் சூழல்

பதவி முடிந்த நிலையில் அத்தியாவசிய பணிகள் சுணக்கம்! குடிநீர் வினியோகத்திற்காக பரிதவிக்கும் சூழல்

அருப்புக்கோட்டை; மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் பதவி காலம் முடிவடைந்து விட்ட நிலையில், ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகள் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.2019ல் தேர்வான ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2025 ஜன 5 ம் தேதி மாதம் முடிவடைந்தது. தேர்தல் நடத்துவது தள்ளி போவதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த ஊராட்சிகளில் உள்ள செயலர்கள் ஊராட்சியின் பணிகளை கவனித்து வருவர்.சில மாதங்களுக்கு முன்பு, ஊராட்சி செயலர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர். வெளியூர்களில் இருந்து ஊராட்சி செயலர்கள் வருவதாலும், அந்தந்த ஊராட்சியில் செய்யப்பட பணிகளைப் பற்றி தெரியாமல் இருப்பதாலும் அத்தியாவசிய பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. ஊராட்சி தலைவர்கள் பதவியில் இருந்த போது அந்தந்த ஊராட்சி அலுவலகத்திற்கு அவர்கள் காலையிலேயே வந்து குடிநீர் தெரு விளக்கு உட்பட பிரச்சனைகளை உடனுக்குடன் சரி செய்வர்.காலையிலேயே குடிநீர் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை பணியாளர்களை கொண்டு நடவடிக்கை எடுப்பர். காலையிலேயே தெரு விளக்கு பிரச்சனை, குடிநீர் குழாய் உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்டு வரும் போது அதற்கான நடவடிக்கைகளை நேரில் இருந்து கவனித்து வந்தனர். தற்போது ஊராட்சி தலைவர்கள் பதவி முடிந்து போன நிலையில், செயலர்கள் வெளியூரில் இருந்து வருவதால் அலுவலகத்திற்கு 10:00 மணிக்கு தான் வருகின்றனர். மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக பெற முடியாமல் போகிறது. மேலும் ஊராட்சி செயலர்களுக்கு அடிக்கடி ஊராட்சி அலுவலகத்தில் மீட்டிங் மற்றும் முக்கியமான பணிகளுக்கு ஒன்றிய அலுவலகம் செல்ல வேண்டியிருப்பதால் மக்கள் நேரில் சந்திக்க முடிவதில்லை. குறிப்பாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊராட்சி அலுவலகத்திற்கு தற்காலிக உதவியாளர்கள் நியமித்து மக்களின் அத்தியாவசிய புகார்களை கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதனால் ஊராட்சிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் தீர வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் தொய்வில்லாமல் நடப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை