செயல்பாட்டுக்கு வராத சேவை உரிமைச் சட்டம் அறிக்கையாகவே உள்ள தேர்தல் வாக்குறுதி
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் மக்களுக்கு எளிதாக பெற வேண்டிய சான்றிதழ்கள் பெறுவதில் வீண் அலைக்கழிப்பு, தாமதம், அலுவலர்களின் அலட்சியத்தை தவிர்க்க தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதி படி, தமிழகத்தில் சேவை உரிமை சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட சேவை உரிமைச் சட்டம் கேரளம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி, உத்தரகண்ட் உட்பட பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. தமிழகத்தில் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.இந்த சட்டத்தின் படி பட்டா வழங்குதல், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஓய்வூதிய பலன்கள், பொது விநியோகத் திட்ட பலன்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட சேவைகள் விண்ணப்பித்த தேதியிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறும் அரசு அலுவலர்களிடம் அபராதம் வசூல் செய்யவும் விதிகள் உள்ளன.தமிழகத்தில் இச் சட்டம் அமல்படுத்தப்படாததால் சான்றிதழ்களை பெறுவதில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், அலைக்கழிப்பிற்கும் ஆளாகின்றனர். இடைத்தரகர்களின் ஆதிக்கமும் லஞ்சப்பண புழக்கமும் அதிகமாக உள்ளது.இந்த சேவை உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவோம் என தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 19வது வாக்குறுதியாக தெரிவித்து இருந்தது.ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் சேவை உரிமைச் சட்டத்தை தி.மு.க., அரசு அமல்படுத்தவில்லை.நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.