| ADDED : டிச 08, 2025 05:35 AM
சாத்துார்:: சாலை ஓரங்கள் எல்லாம் சோலைவனம் ஆக்கும் முயற்சியில் தடம் அமைப்பினர் மரக்கன்று நட்டு பராமரித்து வளர்த்து மக்கள் மனதில் தடம் பதித்து வருகின்றனர். சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம், குடிநீர் திட்டப் பணிகள் என சாத்துாரில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக சாலை ஓரங்களில் பல நுாறு ஆண்டுகள் நின்று கொண்டிருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மரங்கள் இல்லாமல் நகர் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து வந்தது.இயல்பிலேயே சாத்துார் பகுதி மக்கள் மரம் வளர்ப்பில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் சிறிய இடம் இருந்தாலும் அதில் பூச்செடிகள் மரங்கள் வளர்த்து வந்தனர். சாத்துார் நகரில் நடராஜா தியேட்டர் ரோடு, கே.கே.நகர், அண்ணா நகர் பகுதியில் சாலை ஓரம் மரங்கள் இல்லாத நிலையில் மக்கள் கோடை காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மரம் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட தடம் தன்னார்வ அமைப்பினர்.ஒன்று கூடி மரம் வளர்ப்பில் ஈடுபட்டனர். தற்போது கே.கே. நகர், நடராஜா தியேட்டர் ரோடு பகுதிகளில் செடிகளாக நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது மரங்களாக வளர்ந்து சோலைவனமாக மாறி வருகிறது. இதனால் வெப்பத்தில் வாடிய மக்கள் மர நிழலில் இளைப்பாரி வருகின்றனர். நகரில் மட்டுமின்றி வைப்பாற்றின் கரையிலும் கண்மாய்களின் கரைகளிலும் பனை மர விதைகள் நடவு செய்துள்ளனர். மண் வளத்தையும் மனித நேயத்துடன் இயலாதவர்களுக்கு உணவு வழங்கியும் சேவை செய்து வரும் தடம் அமைப்பினர் நகர் பகுதி மக்களின் மனதிலும் இடம் பிடித்து உள்ளனர் என்றால் மிகை ஆகாது. சாலைக்கு அழகு மரங்கள் மரங்கள் இல்லாத சாலை பாலைவனம் போல் காட்சியளித்ததால் சாலை ஓரத்தில் மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கே.கே. நகரில் 50க்கும் மேற்பட்ட மரங்களை சொந்த செலவில் நட்டி பராமரித்து வளர்த்துள்ளேன். எனது பணியை பார்த்து பலரும் எனக்கு உதவிகள் செய்தனர்.சாலைகளுக்கு அழகு தருவது மரங்களே , இல்லம் தோறும் மரம் வளர்ப்போம் மலர் செடிகளும் வளர்ப்போம் இவை நம் மனதிற்கும் மண்ணுக்கும் பயன் தரும் மகிழ்ச்சி தரும். பரமசிவம், கே.கே., நகர் குடியிருப்பாளர்.
மரக்கன்று இலவசம் நடராஜா தியேட்டர் ரோடு, மரியன் ஊரணி பூங்காவில் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டியுள்ளோம். இன்னும் சில மாதங்களில் இவைகள் வளர்ந்து அந்தப் பகுதியே சிறிய வனம் போல் காட்சி தரும். பள்ளி மாணவர்களை வைத்தும் மரக்கன்றுகள் நட்டி அவர்களிடமும் மரம் வளர்க்கும் ஆர்வத்தை உருவாக்கி வருகிறோம். மரம் வளர்க்க விரும்புவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் வருகிறோம். மாரிக் கண்ணன், தடம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர், சாத்துார்.