குளு குளு சூழல், பறவைகள் சப்தம்
இயற்கையை தவிர்த்து மனிதனால் எதையும் செய்ய முடியாது. மனிதர்களுக்கு உதவுவதில் மரங்களின் பங்கு அதிகம். மரங்கள் கடவுள் நமக்கு கொடுத்த அரிய பொக்கிஷம். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் பறவைகள், விலங்குகளுக்கும் பயன் அளிக்கிறது. மரங்கள் கார்பன் - -டை- - ஆக்சைடை எடுத்துக் கொண்டு மனிதர்களுக்கு சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க தருகிறது. நிலத்தடி நீரை தூய்மையாகவும், நிலத்தின் தன்மை மாறாமலும் காக்கிறது. மனித சமுதாயத்திற்கு உயிரூட்டும் மரங்களை நாம் நட்டு வளர்த்து பாதுகாக்க வேண்டும்.அந்த வகையில், அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் அமைந்துள்ள டவுன் போலீஸ் ஸ்டேஷன் மரங்கள் அடர்ந்து குளு குளு சூழலில் அமைந்துள்ளது. ஸ்டேஷன் வளாகம், பின்னால் உள்ள குடியிருப்பு உட்பட பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. முன்பகுதியில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் புகார் கொடுக்க வரும் மக்கள் வசதியாக உட்கார இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பறவைகள் வளர்க்கப்படுகின்றன.டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பொறுப்பேற்ற உடன் இயற்கை சூழலில் ஸ்டேஷனை மாற்றி உள்ளார். ஸ்டேஷன் என்ற பயம், தயக்கம் இன்றி மக்கள் வந்து செல்லும் வகையில் சூழல் மாறி உள்ளது. வளாகம் முழுவதும் வாகை, புங்கை, நாவல், மூங்கில், வேப்ப மரம், மா, பலா, நெல்லி உட்பட மரங்களும், கற்றாழை, துளசி, ஓமம் மூலிகை செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளன. ஸ்டேஷனில் மினி நுாலகம் உள்ளது.மக்கள் ஏதாவது ஒரு பிரச்னைக்காகத்தான் புகார் கொடுக்க பதற்றத்துடன் ஸ்டேஷனுக்கு வருவர். இயற்கையாகவே போலீஸ் ஸ்டேஷன் என்றால் ஒருவித பயம் உண்டு. இதை தவிர்க்கவும், தயக்கம் இன்றி மன அமைதியுடன் மக்கள் புகார் கொடுக்க இதுபோன்ற இயற்கைச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வருபவர்கள் மரங்கள் அடர்ந்த சூழலை அனுபவித்து மன அமைதியுடன் தங்கள் புகார்களை கொடுத்துச் செல்கின்றனர்.- பாலமுருகன், இன்ஸ்பெக்டர்.
குளு குளு சூழல்
எங்கள் டவுன் ஸ்டேஷன் மரங்கள் சூழ்ந்து இயற்கையோடு இணைந்து உள்ளதால், மன அமைதியுடன் நாங்கள் பணி புரிகிறோம். எந்தவித டென்ஷன் இல்லை. மக்களும் இயற்கை சூழலை அனுபவித்து சிறிது நேரம் உட்கார்ந்து அனுபவித்து செல்கின்றனர்.- ஆண்டாள், சிறப்பு எஸ்.ஐ.,