உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதிப்படுத்த தேவை.. ஆய்வு! மினி லாரிகளில் வழங்குவதன் தரத்தையும்

சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதிப்படுத்த தேவை.. ஆய்வு! மினி லாரிகளில் வழங்குவதன் தரத்தையும்

மாவட்டத்தில் அக். 17 முதல் கனமழை பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இருப்பினும் நவ. இறுதி, டிச. மாதங்களில் மழையே அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த பருவமழை ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சிகளில் 'குளோரினைசேஷன்' செய்து வழங்க வேண்டும் என கலெக்டர் சுகபுத்ரா கூறியிருந்தார். இந்நிலையில் உள்ளாட்சி குடிநீரை காட்டிலும் மக்கள், மினி லாரிகளிலும் வரும் குடிநீரை தான் வாங்கி அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மினரல் கேன் குடிநீர் விற்பனையும், மினிலாரி குடிநீர் விற்பனையும் அதிகளவில் நடந்து வருகிறது. ரூ.13 முதல் 15 வரை ஒரு குடத்திற்கு தண்ணீர் தருகின்றனர். கேன் குடிநீர் ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகிறது. இந்நிலையில் இதில் மினிலாரி குடிநீர் பெறப்படும் முறை, அது சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மினிலாரிகள் அதிகரித்துள்ள நிலையில் போட்டி மனப்பான்மை காரணமாக சிலர் அதிக ஊற்றெடுக்கும் நேரங்களில் அதிக தண்ணீரை தொட்டிகளில் தேக்கி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகின்றனர். இவை முற்றிலும் சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இந்த தொற்று பாதித்த குடிநீரால் மழைக்காலங்களில் வயிற்று போக்கு போன்ற நீர் தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளது. அதே போல் கொண்டு வரப்படும் இந்த லாரிகளின் தொட்டிகளும் பல நாட்களாக கழுவாமல் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதே நிலை தான் உள்ளாட்சிகளிலும். முன்பு அவர்கள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த தேதியை அறிவிப்பு பலகையில் எழுதி இருப்பர். இப்போதெல்லாம் அது இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்து மழைக்காலத்தில் பாதுகாப்பான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ