உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி, கல்லுாரி அருகே புகையிலை விற்பனை : தேர்வுகள் நெருங்குவதால் பெற்றோர் அச்சம்

பள்ளி, கல்லுாரி அருகே புகையிலை விற்பனை : தேர்வுகள் நெருங்குவதால் பெற்றோர் அச்சம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே தடை புகையிலை பொருட்கள் விற்பனை குறைந்தபாடில்லை. ஆண்டு இறுதித்தேர்வுகள் நெருங்குவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார், காரியாபட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றிய ஊரகப்பகுதிகளில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் தடை புகையிலை விற்பனையை தடுக்கவும், பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும் ஒவ்வொரு சப்டிவிஷன்களிலும் உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் அப்படி இருந்தும் கூலிப், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட தடை புகையிலை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது.உணவுப்பாதுப்புத்துறை, போலீசார் இணைந்து பெட்டி கடைகள், ரோட்டில் வைத்து பயன்படுத்துவோரை மட்டுமே குறி வைத்து நடவடிக்கை எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் மூலம் அபராதம் விதித்து சீல் வைத்து ஒவ்வொரு வாரம், முந்தையை வாரங்களை சேர்த்து ஒவ்வொரு மாதமாக மொத்தமாக கணக்கீட்டு பெருந்தொகை அபராதமாக விதித்தது போன்றும், பல கடைகளை சீல் வைத்ததும் போன்ற செய்திகளை வெளியிடுகின்றனர்.ஆனால் இவர்கள் மொத்த விற்பனையாளர்களை இதுவரை கண்டறியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. மேலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு, செமஸ்டர் தேர்வுகள் நெருங்குகின்றன. மாணவர்கள் மத்தியில் சர்வசாதரணமாக தடை புகையிலை பொருட்கள் புழக்கத்தில் இருப்பதால் படிப்பை முடித்து எதிர்காலத்தை துவங்குவதற்கு முன்பே தவறான பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இது போன்ற செயல்களை பெற்றோர் கண்டறிந்து கண்டித்தாலும், அவர்களுக்கு தெரியாமல் பழக்கத்தை தொடர்வது நடக்கிறது. தடை புகையிலை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைப்பதால் பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து அச்ச உணர்வு உண்டாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லுாரிகளில் தடை புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல் நலப்பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் உணவுப்பாதுகாப்புதுறை, போலீசார் இணைந்து எடுத்து வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை