பொங்கல் கரும்பு விற்பனையாகாததால் வீரசோழனில் வியாபாரிகள் வேதனை
நரிக்குடி : நரிக்குடி வீரசோழனில் பொங்கலுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த கரும்பு விற்பனையாகாததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர். நரிக்குடி வீரசோழனில் காய்கறி, ஆட்டுச் சந்தை செயல்பட்டு வருவதால் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஏராளமானோர் சந்தைகளுக்கு வந்து செல்வர். எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தைப்பொங்கலுக்கு அப்பகுதி வியாபாரிகள் மேலூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதி விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி வீரசோழனில் விற்பனைக்கு வைத்திருந்தனர். கரும்பு கட்டு ரூ.650 முதல் 700 வரை விற்பனையானது. இத்தனைக்கும் கரும்பு வரத்து குறைவாக இருந்தது. அப்படி இருந்தும் அதிக விலை கொடுத்து வாங்க விருப்பமில்லாத மக்கள் பெயருக்கு 1, 2 கரும்புகளை வாங்கி தைப்பொங்கலை கொண்டாடினார். அதிகமாக விற்பனையாகும், ஓரளவிற்கு உழைத்த கூலி, லாபமாக கிடைக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் ஆர்வம் காட்டாததால் கரும்பு விற்பனை மந்தமாக இருந்தது. கடைசி நேரத்தில் குறைந்த விலைக்காவது விற்று விட வேண்டும் என வியாபாரிகள் முன் வந்த போதும் வாங்க ஆளில்லாததால் அப்படியே சந்தையில் விட்டு விட்டனர்.அதிக விலை கொடுத்து வாங்கி, பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர். தற்போது கரும்புகள் ஆங்காங்கே கேட்பாரற்று, வாடிக் கிடக்கிறது. வியாபாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு தைப்பொங்கலுக்கு கரும்பு வரத்து குறைவாக இருந்தது. நன்றாக விற்பனையாகும் என எதிர்பார்த்தோம். சரிவர விற்பனையாகவில்லை. ஒருவேளை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க விரும்பவில்லையா அல்லது கரும்பு திண்ண பலருக்கு ஆசை இல்லையா என்பது தெரியவில்லை. முதலுக்கு கூட விற்பனையாகவில்லை. நஷ்டம் ஏற்பட்டதால் வேதனையாக உள்ளது.