| ADDED : மார் 12, 2024 05:59 AM
சிவகாசி : மாவட்டத்தில் நகரங்களில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. அதே சமயத்தில் முக்கிய சந்திப்புகளில் டிராபிக் சிக்னல் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் நகர் மட்டுமல்லாது கிராமப் பகுதிகளிலும் அதிகளவில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் பெருகிவிட்டன. நகர் பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக டூவீலர் , கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் வருகின்றன. பொதுவாகவே பெரும்பாலான நகரங்களில் பஜார் பகுதி மற்றும் முக்கிய சந்திப்புகளில் ஆக்கிரமிப்பினால் ரோடு சுருங்கி விட்டது. இதனால் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், விருதுநகர். உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் முக்கிய சந்திப்பு இடங்களில் டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகாசியில் காரனேசன் விலக்கு, இரட்டை பாலம், பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்டு , நாரணாபுரம் விலக்கு மணிநகர் முக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எங்குமே செயல்படவில்லை. சிக்னல்கள் அனைத்தும் வெறும் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால் வாகனங்கள் முறையாக செல்லாமல் அதில் வருபவர்கள் ஒருவருக்கொருவர் முந்தி சென்றும், காத்திருக்காமல் குறுக்கே புகுந்தும் விபத்துக்கு வழி ஏற்படுத்துகின்றனர். சிறிது நேரம் காத்திருந்து சென்றாலே விபத்தை தவிர்க்கலாம்.ஆனால் அதற்கு யாருமே தயாராக இல்லை. வேலைக்கோ அல்லது ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முன்னதாகவே கிளம்ப வேண்டும். ஆனால் பெரும்பாலோனோர் தாமதமாக கிளம்பி சிக்னல் உள்ள இடங்களில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்கின்றனர். நகரங்களில் டிராபிக் போலீசாரும் பற்றாக்குறையாக இருப்பதால் அவர்களால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. நகர் பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளுக்கும் ஏராளமான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. எனவே நகரங்களில் உள்ள டிராபிக் சிக்னல் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சந்திப்புகளில் டிராபிக் சிக்னல் அமைக்க வேண்டும்.