உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழுதாகி பாதியில் நிற்கும் அரசு பஸ்களால் பயணங்கள் தடைபடுவதால் கிராம மக்கள் அவதி

பழுதாகி பாதியில் நிற்கும் அரசு பஸ்களால் பயணங்கள் தடைபடுவதால் கிராம மக்கள் அவதி

விருதுநகர்: மாவட்டத்தில் உள்ள புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி பாதியில் நின்று விடுகிறது. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டு பயணிக்கும் மக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக மாறியுள்ளது.மாவட்டத்தில் விருதுநகர் 71, சாத்துார் 57, அருப்புக்கோட்டை 69, சிவகாசி 65, ஸ்ரீவில்லிப்புத்துார் 43, ராஜபாளையம் 1 -- 48, ராஜபாளையம் 2 -- 30, காரியாப்பட்டி 19, வத்திராயிருப்பு 16 என மொத்தம் அரசு போக்குவரத்து கழகங்களில் 418 பஸ்கள் உள்ளது. இவற்றில் பெரும்பாலும் 10 ஆண்டுகளை கடந்த பஸ்கள் புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களை தொடர்ந்து பராமரித்து இயக்குவதற்கு அதிக உதிரிபாகங்கள் தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கம் தேவையான அளவிற்கு உதிரிபாகங்களை கொள்முதல் செய்து வழங்கவில்லை. இதனால் பழுதாகி நிற்கும் பஸ்களில் இருந்து இயக்கத்தில் உள்ள பஸ்களுக்கு தேவையான உதிரிபாகங்களை எடுத்து மாற்றி பொருத்தி வருகின்றனர்.ஆனால் ஆண்டுகள் கடந்த பஸ்களை இயக்குவதால் புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் போது அடிக்கடி பஸ்கள் பழுதாகி நின்று விடுகின்றன. இந்த நிலை தொடர்ந்து நடந்து வருவதால் மக்கள் செய்வதறியாது திண்டாடுகின்றனர்.மேலும் டெக்னீசியன், டிரைவர், நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் பஸ்களை முறையாக இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்லுாரி மாணவர்கள், மக்கள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என போராட்டம் நடத்தும் போது வழித்தட நீட்டிப்பு செய்து பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் புதிதாக கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.இதனால் பயண நேரம் அதிகரித்து திட்டமிட்டப்படி செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள், பணிக்கு சென்று வருபவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை ரோட்டில் தனியார் பஸ்சின் கூரையில் அமர்ந்தவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்தனர். இது குறித்து விசாரித்த போது கல்லுாரிக்கு செல்லும் போதும், திரும்ப செல்லும் நேரங்களில் போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால் இச்சம்பவம் நடந்துள்ளது.விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம், பயணிகள் அதிகமாக செல்லும் தொலைதுார கிராமங்களுக்கு தேவைக்கு ஏற்ப காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கினால் விபத்து நிகழ்வது தவிர்க்க முடியும். மேலும் பஸ்களை முறையாக பராமரித்து பயணத்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை