திருச்சுழி : திருச்சுழி ரமண மகரிஷி அவதரித்த புண்ய ஸ்தலம் ஆகும். இங்கு ரமணருக்கு 'ஸ்ரீரமண மந்ராலயா' என்ற கோயில், கடந்த 2008 ல் 'மவுன துறவி ஸ்ரீ சத்யானந்த மஹாராஜ்' என்பவரால் கட்டப்பட்டது. தற்சமயம் ரமணமூர்த்திக்கு பளிங்கு சிலை ராஜஸ்தானில் வடிவமைக்கப்பட்டு, குஜராத்தின் சோம்நாத் சோமேஸ்வரர் கோயிலைப்போல் வடிவமைத்து,கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் விநாயகர் வழிபாடு, லிகிதநாம ஜெபம், மந்ர ஜெபம், பஜனை நடந்தது. முதல்கால பூஜை , பூர்ணாஹூதி, தேவார திவ்யபிரபந்தம், ரமண மகரிஷி பாடல் பாடப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு ஐந்தாம் கால பூஜையுடன், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் துவங்கியது. ஸ்ரீகோர்ணா, குடகுமலை, யமுனை, பத்ரிநாத், கேதார் நாத், நர்மதா, துங்கபத்ரா, கிருஷ்ணா, கோதாவரி, பிரம்மபுத்திரா உட்பட 64 புண்ணிய நதி தீர்த்தங்கள் மூலம் ரமணருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா தலைமை வகித்தார். ஜெயவிலாஸ் தொழில் அதிபர்கள், தினகரன், கண்ணன், திண்டுக்கல் எம்.பி., சித்தன் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ், பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராம்பாபு, ராஜபாளையம் மில் அதிபர் சீனிவாச ராஜா வாழ்த்தி பேசினர். சர்வமத பிரார்த்தனைகள், அன்னதானம் நடந்தது. யுனிராம் டிரஸ்ட் தலைவர் சத்பிராவனந்தா நன்றி கூறினார்.