| ADDED : செப் 23, 2011 01:04 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிப்புத்தூர் உழவர் சந்தை அருகே மீன்கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் -மதுரை மெயின் ரோட்டில் உள்ள மீன் சந்தையில், பெரும்பாலான கடைகள் அனுமதியின்றி இயங்குகிறது. இந்த ரோட்டை பலரும் குறுக்கு சாலையாக பயன்படுத்துகின்றனர். மீன் கடைகளால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் வீட்டை இடித்து மண்ணை வேறு கொட்டுகின்றனர். தனியார் சிலர் ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் பாதிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வரை மூன்று கடைகளே இருந்த நிலையில், தற்போது ஆறுக்கும் மேற்பட்ட கடைகளை வைத்துள்ளனர். ஏற்கனவே இப்பகுதி குறுகலாக இருப்பதால் மக்கள் தவிக்கும் நிலையில், தற்போது கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் டூவீலர்களில் கூட செல்வது சிரமமாக உள்ளது. வாறுகால்களில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. மீன் சந்தை மெயின் ரோடு அருகே அமைந்துள்ளதால் மீன் வாங்கி வருபவர்கள் விபத்துக்குள்ளாகி உயிர் பலி ஏற்படும் சம்பவங்களும் நடக்கிறது. மீன்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.