| ADDED : செப் 23, 2011 01:05 AM
காரியாபட்டி : பரமக்குடியில் நடந்த சம்பவத்திற்காக ஒரு வாரமாக பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் தவித்து வருகின்றனர். அதிகாரிகள் பஸ்களை இயக்க முன் வர வேண்டும். விருதுநகரிலிருந்து அழகியநல்லூர், மாந்தோப்பு, அச்சங்குளம், பிசிண்டி வழியாக காரியாபட்டிக்கு இரண்டு அரசு பஸ்கள் இயங்கின. மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் பரமக்குடியில் நடந்த சம்பவத்தை காரணம் காட்டி இந்த வழித்தடத்தில் இயக்கிய பஸ்களும் நிறுத்தப்பட்டன. சகஜ நிலை திரும்பிய பின்பும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் எட்டு கி.மீ.,தூரமுள்ள அழகியநல்லூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு பள்ளிகளுக்கு நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அவசர தேவைக்கு எங்கும் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பஸ் இயக்க வேண்டி அச்சங்குளம் மக்கள் விருதுநகர் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் சென்று முறையிட்டனர். பஸ்சுக்கு எந்த சேதம் ஏற்பட்டாலும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என மேலாளர் தெரிவித்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். பல்வேறு பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் இப்பகுதி மக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.