கோயில் சாவியை பெற்றுத் தர கோரி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள வாழ வந்தாள், திருவுரை அம்மன் கோயில் சாவியை தங்களிடம் வழங்க கோரி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்குளம் கிராமத்தில் உள்ள இவ்விரு கோயில்களின் நிர்வாகத்தையும் அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ரத்தினம் என்பவர் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்தார். தற்போது அவரின் செயல்பாடுகளில் கிராம மக்கள் திருப்தி அடையாததால் கோயில்களின் சாவிகளை தங்களிடம் வழங்க கோரினர். ஆனால், இதனை ரத்தினம் ஏற்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டிருந்தனர். இதில் நேற்று காலை 11:00 மணிக்கு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். அமைதிப் பேச்சு வார்த்தையில் சாவியை ஒப்படைக்க முடியாது என கூறி ரத்தினம் வெளியேறினார். எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் நேற்று மாலை 6:00 மணியை கடந்தும் அச்சங்குளம் கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.