உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காவிரி, வைகை ,கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம்... நிறைவேறுமா :வீணாக கடலில் கலக்கும் மழை வெள்ளத்தால் தடுப்பதை தடுக்க

காவிரி, வைகை ,கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம்... நிறைவேறுமா :வீணாக கடலில் கலக்கும் மழை வெள்ளத்தால் தடுப்பதை தடுக்க

காரியாபட்டி:மழை நேரங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து, பின்தங்கிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல ஏற்படுத்தப்பட்ட காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் கிடப்பில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. நீண்ட நாள் கனவான இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில், காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மட்டுமே பிரதான தொழில். போதிய நீர் ஆதாரம் இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. ரூ. 14 ஆயிரத்து 200 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டது. ரூ. 7 ஆயிரத்து 100 கோடி நபார்டு வங்கி மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை வரை ஒரு பகுதியாகவும், மானாமதுரை வரை 2வது பகுதியாகவும், காரியாபட்டி பி. புதுப்பட்டி வரை 3வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு, சென்ற ஆட்சியில் ரூ. 800 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. 2, 3 வது கட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டன. நில ஆர்ஜிதம் செய்ய ரூ. 290 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதோடு சரி. ஒதுக்கவில்லை. நீர் வழித்தடம் ஏற்படுத்தப்பட உள்ள நிலங்கள் கண்டறியப்பட்டன. அதனை விற்க, வாங்க, பத்திரப்பதிவு செய்ய முடியாமல் நிறுத்தி வைத்துள்ளதால், விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மழை நேரங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. மழையை நம்பி, ஒவ்வொரு ஆண்டும் நெல் நடவு செய்கின்றனர். நல்ல மழை பெய்தும் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாததால் உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் கருகுகின்றன. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்ற பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தியும், வருகின்றனர். மிகவும் பின்தங்கிய பகுதிகளான காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக இருக்கும் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ