உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காற்றுக்காலத்தில் தலைவலியாகும் பிளக்ஸ் பேனர், ஹோர்டிங்குகள் :அகற்றுமா மாவட்ட நிர்வாகம்

காற்றுக்காலத்தில் தலைவலியாகும் பிளக்ஸ் பேனர், ஹோர்டிங்குகள் :அகற்றுமா மாவட்ட நிர்வாகம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தற்போது காற்று காலம் என்பதால் ஆங்காங்கே ரோடுகளில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள், மாடிக்கட்டங்களில் வைக்கப்பட்டுள்ள ஹோர்டிங்குகளால் விபத்து அபாயம் உள்ளது. அறிவிக்கப்பட்ட காலம் தாண்டியும் இருக்கும் இவற்றால் பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அகற்ற முன்வர வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் பிளக்ஸ் பேனர் கலாசாரம் இன்னும் ஓயவில்லை. மெல்ல மெல்ல அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்த நிலையில், தற்போது சுப நிகழ்ச்சிகளிலும் தலைதுாக்குகிறது. இவை ரோட்டோரங்களில் ஆபத்தான இடங்களில் வைக்கப்பட்டு சாய்ந்துள்ளன. அதே போல் சிலர் மின்கம்பங்களில் கட்டி வைக்கின்றனர். 2019 செப்.ல் அ.தி.மு.க., நிர்வாகி ஒருவரின் திருமண வீட்டு பிளக்ஸ் பேனர் சரிந்து டூவீலரில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தையே வேதனையடைய செய்தது. இதற்கு பின் உயர்நீதிமன்றம் கடும் உத்தரவுகள் பிறப்பித்தது. மூன்று ஆண்டுகள் வரை கட்டுப்பாடுகள் கறாராக இருந்தன. இதனால் பேனர் பயன்பாடு குறைந்திருந்தது. ஆனால் 2022ல் நகராட்சி தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்ற பிறகு கட்சியினர் மத்தியில் மீண்டும் பிளக்ஸ் பேனர் கலாசாரம் தலைதுாக்க துவங்கியது.கட்சிக்காரர்களின் இல்ல திருமணம் என்றால் ரோட்டின் ஓரம், பொது இடம் என எதுவும் பார்ப்பது கிடையாது. பிளக்ஸ் பேனரை நடைபாதையில் வைக்க கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு எடுக்க வேண்டும். அதன் உறுதித்தன்மையை போலீஸ், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உயர்நீதிமன்றம் அளித்திருந்தது. அது எதுவுமே தற்போது பின்பற்றுவது கிடையாது. பிளக்ஸ் பேனர் வைக்க போலீசாரின் அனுமதி அவசியம். தற்போது இதை போலீசாரும் பின்பற்றுவதில்லை. மக்களும் கண்டுக் கொள்வதில்லை. இதனால் பேனர் வைக்கும் கலாசாரம் இஷ்டத்திற்கு அதிகரித்து வருகிறது.அதே போல் மாடிக்கட்டடங்கள், உயரமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள இரும்பு ஹோர்டிங்குகளை அகற்ற வேண்டும். இரும்புக்கம்பிகளால் அமைக்கப்பட்ட இவை சாய்ந்தால் பெரிய விபத்துக்கு தான் வாய்ப்பு உள்ளது. இவற்றில் பல துருப்பிடித்து மோசமான நிலையில் உள்ளன.மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க வேண்டும். தலைதுாக்கும் பிளக்ஸ் பேனர் கலாசாரத்தை தடுத்து ரோட்டோர விபத்துக்களை தடுக்க வேண்டும். மாடிக்கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஹோர்டிங்குகளை அப்புறப்படுத்த முன் வர வேண்டும்.மாதக்கணக்கில் உள்ளனவிருதுநகரில் திரும்பிய பக்கமெல்லாம் பிளக்ஸ் பேனர் வைக்கும் கலாசாரம் பெருகி வருகிறது. அவை மாதக்கணக்கில் அகற்றப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் தெப்பத்தை சுற்றிலும் இது அதிகமாக உள்ளது. இவை விழுந்தால் பாதிப்பு தான். ஹோர்டிங்குகளும் அகற்றப்படாமல் இருப்பதால் பாதிப்பு உள்ளது.- காளிதாஸ்மாவட்ட செயலாளர், ம.நீ.ம.,அச்சப்பட வேண்டியுள்ளதுதற்போது காற்றுக்காலம் என்பதால் மாலை நேரங்களில் அதிகளவில் காற்று வீசி வருகிறது. பணி முடித்து வீடு திரும்புவோர், ஹோர்டிங்குகள், பேனர்களை பார்த்தால் அச்சப்பட வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அபாயம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இவற்றை அகற்ற வேண்டும்.- நல்லதம்பிதனியார் ஊழியர், விருதுநகர்

தீர்வு

மாவட்ட நிர்வாகம் பிளக்ஸ் பேனர் அனுமதிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதித்த பேனர்களை உரிய காலத்திற்கு பின் அகற்றுவதை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட போலீசார் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஹோர்டிங்குகளை அகற்ற அந்தந்த கட்டட உரிமையாளர்களுக்கும், சம்மந்தப்பட்ட ஹோர்டிங் அமைத்தவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி விபத்துக்கு முன் தீர்வு காணவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி