மேற்படிப்புக்கு செல்லும் டாக்டர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா
விருதுநகர் : அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், மேற்படிப்புக்காக பணியில் இருந்து வெளியேற துவங்கியுள்ளனர். இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் முதல் பட்டியலில் தேர்வானவர்கள் இன்று முதல் அரசு பணியில் இருந்து விலகி முதுகலை படிப்பதற்காக செல்கின்றனர். இந்த கவுன்சிலிங் ஒரு மாதம் வரை நடக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் உள்ள எம்.பி.பி.எஸ்., மருத்துவர்கள் பலர் முதுகலை மருத்துவம் படிக்க பணியில் இருந்து விலகி விடுவர். இதனால் உருவாகும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த பணியிடங்கள் காலியாக இருந்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பாதிக்கப்படும். எனவே மேற்படிப்புக்கு செல்லும் டாக்டர்களால் ஏற்படும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.