சாத்துாரில் தரைமட்டமான பட்டாசு ஆலை கேமராவில் புகையை பார்த்து தப்பிய ஊழியர்கள்
சாத்துார் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் கே.வி.கந்தசாமிக்கு சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை, சாத்துார் அருகே முத்தால் நாயக்கன் பட்டியில் உள்ளது. நாக்பூர் லைசென்ஸ் பெற்ற ஆலையில், 60க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், தொழிலாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதில், மருந்து கலவை அறையில், மீதம் இருந்த மணி மருந்தை சரிவர அகற்றவில்லை. நேற்று காலை, 6:30 மணிக்கு அறையில் இருந்த மணி மருந்து நீர்த்து, வெண் புகை கிளம்பியதை சிசிடிவி கேமராவில் பார்த்த, ஆலையில் தங்கி பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர். சிறிது நேரத்திலேயே பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.பட்டாசுகளை ஏற்றி நின்றிருந்த லாரி முற்றிலுமாக வெடித்து சிதறியது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் ஆலைக்குள் தீயை அணைக்க சென்ற போது, மீண்டும் மற்றொரு அறையில், பூமி அதிரும் வகையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், பத்திரிக்கையாளர்களும் நாலாபுறமும் சிதறி ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக, பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தது.பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள புதுக் காலனியில் வெடிசத்தத்தில், 20க்கும் மேற்பட்ட வீடுகளின் ஆஸ்பெட்டாஸ் கூரை சேதமடைந்தது. வீட்டு உபயோக பொருட்களும் சேதமடைந்தன. யாரும் காயமடையவில்லை. சேதமடைந்த வீடுகளை சீரமைக்க, இழப்பீடு வழங்க கோரி அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் ஐந்து அறைகள் தரைமட்டமாகின. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.