| ADDED : செப் 23, 2011 11:19 PM
ராமநாதபுரம்: ''தமிழகத்தில் திருப்பணி முடிவுற்ற கோயில்களில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,'' என இந்து அறநிலையத்துறை கமிஷனர் முத்தையா கலைவாணன் தெரிவித்தார்.
சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி ராமேஸ்வரம் கோயிலில் சேதமடைந்த சுவாமி சிலைகள், தங்க, வெள்ளி வாகனங்கள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இந்த பணிகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை கமிஷனர் முத்தையா கலைவாணன் நேற்று ராமேஸ்வரம் வந்தார். ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரம் மற்றும் கோயிலில் நடந்து வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: ராமேஸ்வரம் விடுதிகளில் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் நிறுத்த நிரந்த இடம் ஒதுக்கீடு குறித்து கலெக்டர், எஸ்.பி.,யிடம் ஆலோசனை நடத்தப்படும். காலியாக உள்ள குருக்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். ராமேஸ்வரம் கோயிலில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் ஜெ., ஆலோசனை படி நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 2013ல் வடக்கு, தெற்கு ராஜகோபுரம் பணிகள் நிறைவடையும். தமிழகத்தில் ஏராளமான கோயில்களில் திருப்பணி முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகங்கள் சார்பில் கோரப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவுபடி விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார்.