| ADDED : ஆக 14, 2011 09:05 PM
சென்னை: ஊழல் எதிர்ப்பு மசோதாவை, மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தக் கோரி மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தக் கோரி, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில், சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.இதில், மாநில இளைஞர் ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது:அரசின் லோக்பால், ஊழலையும், ஊழல் புரிபவர்களையும் தவிர்த்து, ஊழலை எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக உள்ளது. ஊழல் புரிபவர்கள் மீது புகார் தெரிவித்து, புகார் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும். ஆனால், கொடுத்த புகார் நிரூபணம் ஆகவில்லை என்றால், புகார் கொடுத்தவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று உள்ளது.இத்தகைய, அரசின் லோக்பால் மசோதா, ஊழல் புரிபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது. அதனால், மக்களுக்கு பயன் அளிக்கும், 'ஜன லோக்பால்' மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கர்நாடக மாநிலம் போல, தமிழகத்திலும் லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அருள்தாஸ் கூறினார்.மனிதச் சங்கிலி போராட்டத்தில் பல இயக்கங்கள் கலந்து கொண்டன.