திண்டுக்கல் : அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து போட்டியிட்ட, தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயன், நிலஅபகரிப்புக்கு தூண்டியதாக, கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வி.சித்தூரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர், சந்திரசேகரன் எஸ்.பி., யிடம் அளித்த மனு:எனது தந்தை காளியப்பன், மருதபிள்ளை என்பவரிடம், 1985 ல், 4 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, வாங்கினார். இந்த இடத்தில் நான் குடியிருந்து வருகிறேன். இதில் 2 ஏக்கர் 40 சென்ட் இடத்தை, வடமதுரை பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் அழகுமலை, இளைஞரணி பொறுப்பாளர் ரஞ்சித்குமார், சவுந்தரம், மனைவி ஈஸ்வரி, மதுரை எஸ்.எஸ்.காலனி நல்லதம்பி ஆகியோர்ஆக்கிரமித்து, பத்திரம் பதிந்தனர். மீதியிருந்த 2 ஏக்கரை, ஒய்வு பெற்ற எஸ்.ஐ., பாலசுப்ரமணி வாங்கினார். அதையும் தடுத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கு சாணார்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயன் தூண்டுதலாக இருந்தார் என, தெரிவித்தார்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முருகன் விசாரித்தார். சிகிச்சையில்:கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சையில் இருந்த விஜயனை, நேற்று, போலீசார் கைது செய்தனர். இவர், கடந்த தேர்தலில், அமைச்சரை எதிர்த்து போட்டியிட்டார்.அவர் கூறுகையில், ''குளுகோஸ் ஏறிய பிளாஸ்திரியை அகற்றுவதற்குள், கட்டாயப்படுத்தி கைது செய்தனர். ஆப்பரேஷன் செய்ததால், கைலி தான் அணிய முடிகிறது,'' என்றார்.