| ADDED : செப் 23, 2011 11:59 PM
திருநெல்வேலி: மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது அரசு பஸ் மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்தை அடுத்த வெள்ளங்குழி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 46, அரசுப் பள்ளியில் இரவுக் காவலராக பணிபுரிந்தார். இவரது நண்பர் விக்கிரமசிங்கபுரம் சக்திவேல், 49, அம்பாசமுத்திரத்தில் இருந்து நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு, வெள்ளங்குழி வந்தார். பின் சீட்டில் முத்துராமலிங்கம் அமர்ந்திருந்தார். நேற்று மாலை 5.30 மணியளவில், சேரன் மகாதேவி-அம்பாசமுத்திரம் ரோட்டில், வெள்ளங்குழி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். எதிரே, நாகர்கோவிலில் இருந்து சேர்வலாறு சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சுக்குள் சிக்கி, இரண்டு பேரும் பலியாகினர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பஸ் டிரைவர் நெல்லை, பழவூரைச் சேர்ந்த தர்மநாராயணனை, வீரவநல்லூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.