| ADDED : ஆக 15, 2011 12:35 PM
மதுரை: ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் அன்னா ஹசாரேவும் ஒரு ஊழல்வாதி தான் என முன்னாள் காங்., தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார். மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது, ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி, அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். தற்போது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியுள்ளார். என்னைப்பொறுத்தவரையில் அன்னா ஹசாரேவும் ஊழல்வாதி தான். அவரது அறக்கட்டளையின் 20 ஆண்டுகால கணக்குவழக்குகளை சரிபார்க்க வேண்டும். அவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். ஹசாரேயின் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்று தெரிவித்தார். மேலும், இலங்கை பிரச்னையில் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இலங்கை மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், ராஜிவ் கொலை வழக்கில் மூன்று பேரின் கருணை மனு, ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார். சோனியாவின் பெருந்தன்மை காரணமாகவே நளினியின் தண்டனை குறைக்கப்பட்டதாகவும் இளங்கோவன் கூறினார். வரும் உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என காங்., தொண்டர்களும், இளைஞர் காங்கிரசாரும் விரும்புவதாகவும், தற்போதைய அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக செயல்படுவதாகவும், மின்வெட்டு, நில அபகரிப்பு போன்றவை குறைந்துள்ளதாகவும் இளங்கோவன் தெரிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய அரசு தாராளமாக நிதியுதவி அளிக்கிறது என்று தெரிவித்த ஜெ., தற்போது சட்டசபையில் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்று கூறியதை விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது என்ற காங்., தமிழக தலைவர் தங்கபாலு கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தங்கபாலுவும் என்னைப்போன்ற ஒரு முன்னாள் தமிழக காங்., தலைவர் அவ்வளவு தான் என்று பதிலளித்தார்.