சுகாதார சான்று வழங்க ரூ.1,300 லஞ்சம்: துணை இயக்குனர் உதவியாளர் கைது
மதுரை: மதுரையில், பள்ளிக்கு சுகாதாரச் சான்று வழங்க, 1,300 ரூபாய் லஞ்சம் பெற்ற, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டார். வண்டியூரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி, 67. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், எஸ்.எம்.கே., நர்சரி பள்ளி நடத்துகிறார். இந்த கல்வி ஆண்டிற்கான சுகாதாரச் சான்று கேட்டு, விஸ்வநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். கள்ளந்திரி சுகாதார ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்து, சான்று வழங்க பரிந்துரைத்தார். செல்லப்பாண்டியை அணுகிய, துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மச்சக்காளை, 57, என்பவர், '1,300 ரூபாய் லஞ்சம் தந்தால் தான் சான்று தருவேன்' என்றார். செல்லப்பாண்டி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். நேற்று மதியம், துணை இயக்குனர் அலுவலகத்தில், செல்லப்பாண்டியிடமிருந்து மச்சக்காளை 1,300 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.