சென்னை:டாஸ்மாக் பார் உரிமம் தர, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, 5,000 ரூபாய் முன்பணம் பெற்ற டாஸ்மாக் மாவட்ட மேலாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 36. கடந்த எட்டாண்டுகளாக தரமணி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அருகில் பார் லைசென்ஸ் பெற்று நடத்தி வருகிறார். பார் நடத்துபவர்கள், டாஸ்மாக் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட சதவீதத் தொகை செலுத்த வேண்டும். கண்ணன், அந்த தொகையை செலுத்தாமல் இருந்ததால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அவர் பெற்றிருந்த லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முகலிவாக்கத்தில் பார் நடத்துவதற்காக லைசென்ஸ் கோரி, அண்ணா சாலை, தேவநேய பாவாணர் நூலகக் கட்டடத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அலுவலகத்தில் இருந்த மத்திய சென்னை டாஸ்மாக் மேலாளரான வேளச்சேரியைச் சேர்ந்த ராமு, 53 என்பவரை சந்தித்தார். இவர், வடசென்னை மற்றும் காஞ்சிபுர மாவட்ட மேலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, மதுபான பார் லைசென்ஸ் தர வேண்டுமானால், 1 லட்சம் ரூபாய் பணம் லஞ்சமாகத் தர வேண்டும் என்று கண்ணனிடம், ராமு கேட்டார். லஞ்சத் தொகையை 50 ஆயிரம் ரூபாயாகக் குறைக்குமாறு கண்ணன் கேட்டும், ஒப்புக் கொள்ளாத மேலாளர் ராமு, விண்ணப்பத்துடன் 5,000 ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டார்.
இதற்கு ஒப்புக் கொண்ட கண்ணன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி.,க்கள் அலி பாஷா மற்றும் சரஸ்வதி தலைமையிலான தனிப்படையினர், மாலை 3 மணிக்கு, திட்டமிட்டபடி 5,000 ரூபாய் பணத்துடன் கண்ணனை, அண்ணா சாலையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். பணத்தை வாங்கிய ராமுவை, கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, ராமுவின் வேளச்சேரி வீட்டிற்கு சென்றனர். கணவர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததால் அவரது மனைவி, அங்கிருந்து தப்பிவிட்டார். போலீசார், மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, அவரை வரவழைத்து வீட்டில் சோதனையிட்டனர். ஆனால், ஏதும் சிக்கவில்லை.இதையடுத்து, மாஜிஸ்திரேட் முன் ராமுவை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.