சென்னை:'மக்களுக்கு குறைந்த கட்டணத்தில், 'டிவி' சேனல்களை வழங்க, தமிழக அரசு துவங்கிய, அரசு, 'கேபிள் டிவி' நிறுவனம், ஏமாற்றம் அளிக்கும் வகையில் செயல்பட்டு, 28.28 கோடி ரூபாய் சொத்தை பயனற்றதாக்கியதோடு, மூன்றாண்டுகளில் 8.11 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது' என, தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.இந்திய தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள, மக்களுக்கு குறைந்த விலையில் உயர்தர 'டிவி' சேனல்களை, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கும் வகையில், 2007 அக்டோபரில் தமிழக அரசு, 'அரசு கேபிள் டிவி நிறுவனம்' ஒன்றைத் துவக்கியது.
அரசின் முதலீட்டுத் தொகை 25 கோடி ரூபாயும், கடனாக 36.35 கோடி ரூபாய் பெற்று, 2008ம் ஆண்டு முதல், இந்த நிறுவனம் செயல்படத் துவங்கியது.நான்கு ஆண்டுகள், மூன்று மாதங்களில் முதலீட்டுத் தொகை மீட்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில், 'கேபிள் டிவி' சேவை, சுமங்கலி, கேபிள் விஷன், ஆத்வே போன்ற தனியார் 'மல்டி சிஸ்டம்' ஆபரேட்டர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், போட்டியான சூழல் ஏற்பட்டது. உள்ளூர் ஆபரேட்டர்களின் உறுதியான ஆதரவு, மக்கள் விரும்பும் சேனல்களை ஒளிபரப்பும் ஒப்பந்தம் முன்கூட்டியே செய்யாமல், வணிகச் செயல்பாட்டைத் துவங்கியதால், நிறுவனச் செயல்பாடு மோசமாக அமைந்தது.
பல கட்டணச் சேனல்களின் வினியோக உரிமையை இந்த நிறுவனம் வாங்கியபோதும், மக்கள் விரும்பும், ஸ்டார், சோனி 'டிவி' போன்றவற்றின், வினியோக உரிமையைத் தர அந்நிறுவனங்கள் மறுத்துவிட்டன. 'ஹை டிப்னிஷன் செட்டாப் பாக்ஸ்'களுக்கான முதலீடு 142.50 கோடி ரூபாயை, திட்ட முதலீட்டில் சேர்த்திருக்க வேண்டும். இதில், 13.75 கோடி ரூபாயை மட்டுமே திட்ட முதலீட்டில் சேர்த்திருந்தது.கடந்த 2008 ஆகஸ்டில், 34,350 வாடிக்கையாளர் ஆதரவோடு துவங்கிய இந்த நிறுவனம், 2010 அக்டோபர் வரை 55,705 வாடிக்கையாளர் ஆதரவை மட்டுமே பெற முடிந்தது. அதற்கு மேல் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை. 2010-11ம் ஆண்டிற்குள் 241.21 கோடி ரூபாயை ஈட்ட முடியும் என மதிப்பிட்டிருந்த நிறுவனம், 2010 அக்டோபர் வரை, 2.48 கோடி ரூபாயை மட்டுமே ஈட்ட முடிந்துள்ளது. வாடிக்கையாளர் ஆதரவு குறைவால், கட்டணச் சேனல் ஒளிபரப்பு உரிமை வாங்குவதையும் 2009 ஆகஸ்டுடன் நிறுத்திக் கொண்டது.
முன்னேற்பாடின்றி வணிக ரீதியான செயல்பாட்டைத் துவக்கியதாலும், மக்கள் விரும்பும் சேனல்களை வழங்க முடியாததாலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை விரிவுபடுத்த முடியாமல், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் தொடர் ஆதரவுக்கான ஒப்பந்தம் கிடைக்காததாலும், நிறுவனம் 8.11 கோடி ரூபாய் ரொக்க இழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும், 28.28 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்படுத்திய அடிப்படை சொத்து பலனளிக்காமல் முடங்கியுள்ளது.நிறுவவனத்தைத் துவக்கியதற்கு, குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை அளிப்பது தான் நோக்கமே தவிர, வருமானத்தை பெருக்குவது இல்லை என, தமிழக அரசு பதில் அளித்துள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கையை எதிர்பார்த்த அளவு இன்று வரை (நவ., 2010) உயர்த்த முடியாததால், அரசின் குறிக்கோளும் நிறைவேறவில்லை என்பதே உண்மை.இவ்வாறு இந்திய தணிக்கைத் துறை, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அரசு 'கேபிள் டிவி' நிறுவனத்தைத் துவக்கி, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஒளிபரப்பைத் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.