சென்னை:சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பா.ம.க., சட்டசபை தலைவர் ஜி.கே.மணி பேசும் போது, பீஹாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசியதை, சபை குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தினார்; அதை சபாநாயகர் ஏற்கவில்லை.தொடர்ந்து அவர் பேச வாய்ப்பு கேட்க, சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபைக்கு வெளியே, ஜி.கே.மணி அளித்த பேட்டி:பீஹார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை, நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்றும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், முதல்வர், அமைச்சர்கள் சிவசங்கரன், ரகுபதி ஆகியோர் கூறியது, உண்மைக்கு மாறான தகவல்.அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினோம். பீஹார் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தியது சரிதான் என, பாட்னா நீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சர் சிவசங்கர், ரகுபதி ஆகியோர் பேசும் போது, 'வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் முடியும்' என்று கூறியுள்ளனர். புள்ளிவிபர சட்டத்தின் அடிப்படையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.பொதுக்கூட்டத்தில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். சட்டசபையில் மூன்றாந்தர பேச்சாளர் போல், அமைச்சர் சிவசங்கர் பேசினார். உயர் பதவிகளில், 10.5 சதவீதத்திற்கு மேல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருப்பதாக நிரூபித்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதுடன், பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்.இல்லையெனில், சிவசங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து, பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான புள்ளிவிபரத்தை, வெள்ளை அறிக்கையாக, அரசு வெளியிட வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு கிடைக்கிறதா என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.