சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் மே 9ல் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள சுதர்சன் பட்டாசு ஆலையில், மே 9ல் நடந்த வெடி விபத்தில், 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்; 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிமையாளர் சார்பில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், இறுதி சடங்கிற்கு, 50,000 ரூபாயும் வழங்கப்பட்டது. பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அப்போது நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என, அறிவித்தார். லோக்சபா தேர்தல் நடைமுறைகள் தற்போது முடிந்துள்ள நிலையில், தற்போது வரை உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கோ, காயமடைந்த தொழிலாளர்களுக்கோ அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. இதனால், குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருந்த பெற்றோரை இழந்த குழந்தைகள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுகின்றனர். உடனடியாக அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, வெடி விபத்தில் உயிரிழந்த மத்திய சேனையை சேர்ந்த அழகர்சாமி மனைவி பாப்பாத்தி கூறுகையில், ''எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் 8ம் வகுப்பும், இளைய மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர். என் கணவர் மட்டுமே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவர் உயிரிழந்த நிலையில் குடும்ப செலவு, குழந்தைகளின் படிப்பு செலவுக்கு சிரமப்பட்டு வருகிறோம். அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு, எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.விபத்தில் உயிரிழந்த மத்திய சேனை வீரலட்சுமியின் சகோதரர் வெள்ளைச்சாமி கூறுகையில், ''என் சகோதரி வீரலட்சுமிக்கு 8 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உட்பட 3 மகள்கள் உள்ளனர். வீரலட்சுமி வேலைக்கு சென்று மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்தார். அவர் உயிரிழந்த பின், நான் தான் குழந்தைகளை கவனித்து வருகிறேன். அவர்களின் கல்வி செலவிற்கு மிகவும் சிரமப்படுகிறோம். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.