உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கை: கலெக்டர்களுக்கு தலைமை செயலர் கடிதம்

உயர் கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கை: கலெக்டர்களுக்கு தலைமை செயலர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேராத மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்து இடைநின்ற மாணவர்கள், 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை செயலர் முருகானந்தம் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேராத மாணவர்களுக்காக, 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், உயர் கல்வியில் சேராத 2.47 லட்சம் மாணவர்களுக்காக, அனைத்து மாவட்டங்களிலும், 94 கோட்டங்களில், உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி, அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்களை அறிந்து, அவர்கள் முடிவு எடுக்க உதவுகிறது. அவர்கள் உயர் கல்வி கற்க வழிகாட்டுதல், ஆதரவு அளித்தல், தேவையான ஆதாரங்களை வழங்குதல் நிகழ்ச்சியின் நோக்கமாகும்.மாவட்ட கலெக்டர்கள், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி, 100 சதவீதம் மாணவர்கள் உயர் கல்வி சேர உதவ வேண்டும். மாணவர்கள் உயர் கல்வியை தொடர முடியாததற்கு, பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.அவற்றை அறிந்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவ வேண்டும். வங்கி கடன், கல்வி உதவித் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், விடுதி வசதி போன்றவற்றை எடுத்துரைக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் உதவியுடன், உயர் கல்வி சேராத மாணவர்கள் அனைவரும், நிகழ்ச்சியில் பங்கேற்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்நிகழ்ச்சி, மூன்று கட்டமாக மாவட்டங்களில் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் உயர் கல்வி கற்க, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உயர் கல்வி சேர முடியாத மாணவர்களுக்கு, திறன் பயிற்சி அளிக்க வேண்டும். திறன் பயிற்சி வகுப்புகளில், அனைத்து மாணவர்களும் சேர்க்கப்படுவதை, உறுதி செய்வதற்காக, வராதவர்கள் தனித்தனியே கண்காணிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து, கலெக்டர்கள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை