ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் 108 வித்வான்கள் பங்கேற்பு
சென்னை:ஜகத்குரு பாரதீ தீர்த்த மஹா சுவமிகளின் சன்யாச சுவீகார பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், சிருங்கேரியில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் நடைபெறுகிறது.வியாசர் வடமொழியில் இயற்றிய 18 புராணங்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவதம்; 18,000 சுலோகங்களைக் கொண்டது என்று மரபு வழக்காகச் சொல்லப்படுகிறது. புராணக் கதைகளுடன், ஆன்மிகத் தத்துவங்கள் வெகுநேர்த்தியாகவும் ஆழமாகவும் பின்னப்பட்டிருக்கும் அருள்நிறை நுால்.இதில் உள்ள வேதாந்த கருத்துக்கள், உபநிடதக் கருத்துக்களின் ஆழத்தையும் மிஞ்சும் அளவிற்கு முக்கியமானவை. ஸப்தாஹம் என்றால், ஏழு நாட்கள் கொண்ட காலவரை. இக்காலவரையில், ஸ்ரீமத்பாகவதத்தைப் படிப்பதும் கேட்பதும் ஒரு உயரிய திட்டமுறையாகக் கருதப்படுகிறது.ஜகத்குரு பாரதீ தீர்த்த மஹா சுவாமிகளின் சன்யாச சுவீகார பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், சுவர்ண பாரதீ எனும் வைபவம், இந்த ஆண்டு முழுதும் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக வரும், 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை, கர்நாடக மாநிலம், சிருங்கேரியில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் நடைபெறுகிறது. இதில், 108 வித்வான்கள் பங்கேற்கின்றனர்.தினசரி நிகழ்வில் ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு சஹஸ்ர நாம உபன்யாசம், ஆதிசங்கர ஸ்தோத்திர பாராயணம், நாம சங்கீர்த்தனம், லட்ச வாசுதேவ துவாதஸாக்ஷரி ஜபம், மஹாபூஜை ஆகியவை நடைபெற உள்ளன. இதன் நேரலையினை, Sringeri.net 'யு-டியூப்' சேனல் வாயிலாக கண்டுகளிக்கலாம்.ஆவணி சிருங்கேரி மடத்தின் சிஷ்யசுவீகார உத்ஸவம்: சிருங்கேரி, ஸ்ரீ சாரதா பீடத்தின் பல உப மடங்களில் ஒன்று ஆவணி சிருங்கேரி மடம். சாந்தானந்த பாரதீ சுவாமிகள், அதன் மடாதிபதியாக உள்ளார்.விவேக் சர்மா என்பவரை அடுத்த பட்டத்திற்கு நியமிக்கும் சிஷ்ய சுவீகார விழா சிருங்கேரியில் பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள் மற்றும் விதுசேகர பாரதீ சன்னிதானம் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.சிருங்கேரி சாரதா பீடத்தின் உப மடங்களின் சன்யாச சுவீகார நிகழ்ச்சிகள், வழக்கமாக ஸ்ரீ மடத்தின் துங்கா நதிக்கரையிலும், அதன் கரையில் அமைந்திருக்கும் அதிஷ்டான மண்டபங்களில் நடைபெறும். இந்த சம்ப்ரதாயத்தின்படி, இவ்விழா சிருங்கேரியில் நடைபெறுகிறது.