சென்னை:அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் அதீத ஆர்வம் காட்டியதால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 25,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு, 16,750 கோடி ரூபாய். தமிழகம் உட்பட நாடு முழுதும், அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=23ye8nu4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் அன்று, பலரும் தங்கம் வாங்குகின்றனர். அதன்படி, நேற்று அட்சய திருதியை கொண்டாட்டம் துவங்கியது. இது, நாளை வரை கொண்டாடப்படுகிறது. நகை வாங்குவதற்காக பலரும் நகை கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, அதற்கு உரிய பணமும் செலுத்தி முன்பதிவு செய்து வந்தனர்.அவர்கள் நேற்று, நகை கடைகளுக்கு சென்று, தாங்கள் செலுத்திய ரசீதுகளை கடைகளில் சமர்ப்பித்து நகைகளை வாங்கினர்.
பலரும் நகை கடைகளில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டங்களிலும் சேர்ந்து, கிடைத்த முதிர்வு தொகை மற்றும் பழைய நகைகளை கொடுத்து, அதனுடன் கூடுதல் பணம் கொடுத்து புதிய நகைகள் வாங்கியுள்ளனர்.வாடிக்கையாளர்களின் வசதிக்காக நகை கடைகள் காலை, 6:00 மணிக்கே திறக்கப்பட்டன.வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் காலையிலேயே சென்று நகைகளை வாங்கினர். இதனால், காலை நகை கடைகளை திறந்தது முதல் நள்ளிரவு மூடப்பட்டது வரை மக்கள் கூட்டம் அலைமோதியது.ஏழை, பணக்காரர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல், பலரும் தங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு கிராம் முதல் அதிக சவரன் வரை நகைகளை வாங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில், 25,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. நேற்று, கிலோ 22 காரட் ஆபரண தங்கம் விலை, 67 லட்சம் ரூபாய். எனவே, நேற்று விற்பனையான தங்கத்தின் மதிப்பு, 16,750 கோடி ரூபாய். கடந்த ஆண்டு அக் ஷய திருதியைக்கு தங்கம் விற்பனை, 20,000 கிலோ என்றளவில் இருந்தது. அட்சய திருதியை இன்றும், நாளையும் நீடிப்பதால், இந்தாண்டு அட்சய திருதியைக்கு, தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாதம் ரூ.1,000 திட்டத்தில் @நகை வாங்கிய மகளிர்@சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:அட்சய திருதியைக்கு எதிர்பார்த்தது போலவே, தங்கம் விற்பனை மிகவும் நன்றாக இருந்தது. தமிழக அரசு மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குகிறது. இத்திட்டம், 2023 செப்டம்பரில் துவங்கியதில் இருந்து பலரும் நகை சேமிப்பு திட்டங்களில், 1,000 ரூபாயை சேமித்து வருகின்றனர்.அட்சய திருதியை முன்னிட்டு கிராமங்களில் நகை வாங்கிய பலரும் மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் சேமித்து வந்த பணத்தை பயன்படுத்தியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.ஒரே நாளில் 3 முறை உயர்ந்த விலை
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,615 ரூபாய்க்கும்; சவரன், 52,920 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று அதிகாலை நகைக்கடைகள் திறக்கப்பட்டன. நேற்று அதிகாலை, தங்கம் கிராமுக்கு, 45 ரூபாய் உயர்ந்து, 6,660 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 360 ரூபாய் அதிகரித்து, 53,280 ரூபாய்க்கு விற்பனையானது.காலை, 8:30 மணிக்கு, தங்கம் கிராமுக்கு மேலும், 45 ரூபாய் அதிகரித்து, 6,705 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 360 ரூபாய் அதிகரித்து, 53,640 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.மாலை, 3:00 மணிக்கு தங்கம் கிராமுக்கு மேலும், 65 ரூபாய் உயர்ந்து, 6,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 54,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல், மக்கள் நகைகளை வாங்கினர். பலர், தங்கம் விலை குறைந்திருந்த போது முன்கூட்டியே பணம் செலுத்தியதால் கூடுதல் செலவு ஏற்படவில்லை.