உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் 12 மாவட்டங்களில் ரூ.306 கோடி வசூல்

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் 12 மாவட்டங்களில் ரூ.306 கோடி வசூல்

சென்னை:மதுக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில், 12 மாவட்டங்களில் 306 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், 297 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.வனம், வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களை, மது பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.இதை தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி, நீலகிரி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் தரப்பில் அவ்வப்போது அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:ஏற்கனவே அமல்படுத்திய 12 மாவட்டங்களில், கூடுதலாக 10 ரூபாய் பெற்றதன் வாயிலாக இதுவரை 306.32 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதில், காலி பாட்டில்களை திருப்பி கொடுத்தவர்களுக்கு, 297.12 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளது. மீதி 9.19 கோடி ரூபாயை தனியாக கணக்கில் வைத்து உள்ளோம்.அடுத்ததாக அமல்படுத்திய ஐந்து மாவட்டங்களில், 54.64 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு, 56.45 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 2.19 கோடி ரூபாயை, தனி கணக்கில் வைத்துள்ளோம். மொத்தத்தில், 12.62 கோடி ரூபாயை தனியாக கணக்கில் வைத்து உள்ளோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அறிக்கையில் கூறப்பட்ட தொகை கணக்கு சரிவர இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அதை சரிபார்த்து புதிதாக அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முறையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N DHANDAPANI
மே 03, 2024 08:06

விவசாயிகள் சார்பாக தமிழக அரசுக்கு பாராட்டுதல்களும் நன்றிகளும் இன்னமும் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் சேர்த்து கட்டணம் விதித்தால் விவசாய நிலங்களும் விவசாயிகளின் கால்களும் பாதுகாக்கப்படும் அரசுக்கும் வருமானம் சேர்ந்து கிடைக்கும் சிந்திக்க வேண்டுகிறோம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ