உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5,000 மெகாவாட் காற்றாலை மின்நிலைய திட்டம்; அறிவித்து 2 ஆண்டாகியும் அமலுக்கு வரவில்லை

5,000 மெகாவாட் காற்றாலை மின்நிலைய திட்டம்; அறிவித்து 2 ஆண்டாகியும் அமலுக்கு வரவில்லை

சென்னை : அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், 5,000 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி, இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை ஒரு மெகா வாட் திறனில் கூட, மின்நிலையம் அமைக்கப்படவில்லை. தமிழகத்தில், 10,900 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. அதில், 9,150 மெகாவாட், தமிழக மின் வாரிய மின் வழித்தடத்தில் இணைக்கப்பட்டவை. மீதி, 1,750 மெகாவாட், மத்திய மின் தொடரமைப்பு கழகத்தின் வழித்தடத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. தமிழக வழித்தடத்தில் இணைக்கப்பட்டுள்ள, மொத்த காற்றாலைகளில் மின்வாரியத்தின் பங்கு, 17 மெகாவாட் மட்டுமே. மற்றவை தனியாரால் அமைக்கப்பட்டவை. அதில், 60 சதவீத நிறுவனங்கள் சொந்த தேவைக்கும், மீதியுள்ளவை மின் வாரியத்திற்கு மின்சாரம் விற்கவும் அமைத்துஉள்ளன. தமிழக அரசு, மொத்த மின் உற்பத்தியில், 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி வாயிலாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், 5,000 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைக்கும் அறிவிப்பை, 2023 துவக்கத்தில் வெளியிட்டது. இரு ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுவரை ஒரு மெகா வாட் திறனில் கூட, மின் நிலையம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து, முதலீட்டாளர்கள் கூறியதாவது:தமிழகம், குஜராத்தில், காற்றாலை மின் நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. ஒரு மெகாவாட் திறனில் காற்றாலை அமைக்க, 3 - 5 ஏக்கர் நிலம் தேவை. குஜராத் அரசு, காற்றாலை அமைக்க நிலங்களை மேம்படுத்தி, குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்குகிறது. தமிழகத்தில் நிலம் விலை மிகவும் அதிகம். காற்றாலைக்கு சாதகமான இடங்களில், நிலங்களை தனியார் வாங்கி, அதிக விலைக்கு விற்கின்றனர். மின் வாரியத்தின் காற்றாலைகள், துாத்துக்குடி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூரில் உள்ளன. கடந்த, 1986 முதல் 1993 வரை அமைக்கப்பட்டதில் பல முடங்கி உள்ளன.அந்த இடங்களில் உள்ள நிலத்தை இலவசமாக வழங்கி, அரசு - தனியார் இணைந்து, காற்றாலை மின் நிலையம் அமைக்க அனுமதி அளித்தால், பலரும் திட்டத்தை செயல்படுத்த முன்வருவர். எனவே, இனியும் தாமதிக்காமல், தனியாருடன் இணைந்து காற்றாலை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை, மின் வாரியம் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- மின்வாரிய அதிகாரி

காற்றாலை மின் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி