உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1 மீட்டருக்கு பதில் 6 மீட்டர் மண் தோண்டியதால் கலெக்டருக்கு கிடுக்கி

1 மீட்டருக்கு பதில் 6 மீட்டர் மண் தோண்டியதால் கலெக்டருக்கு கிடுக்கி

சென்னை:தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின்போது, சட்ட விரோதமாக மண் எடுத்தது தொடர்பாக, அரியலுார் கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், அரியலுாரை சேர்ந்த பழனிசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:சோழபுரம் -- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்க, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, படேல் இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்துக்கு, அரியலுார் கலெக்டர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தார்.தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பகுதிகளில் உள்ள மரங்களுக்கு பாதிப்பில்லாமல், நீர் நிலைகளை அழிக்காமல், 1 மீட்டர் அளவுக்கு மட்டுமே நிலப்பரப்பில் மண் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் போடப்பட்டன.ஆனால், அந்த நிபந்தனை பின்பற்றாமல், பொன்னேரி சோழகம், சுத்தமல்லி, கோவதட்டை ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், கீழ்நத்தம், முத்துவாஞ்சேரி, சத்தம்பாடி உள்ளிட்ட அரசு நிலங்களில் இருந்தும், 6 மீட்டர் அளவுக்கு சட்ட விரோத மண் எடுத்து விற்பனை செய்துள்ளனர். இதன் வாயிலாக, அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்ட விரோதமாக செயல்பட்ட நிறுவனம், அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக, ஏற்கனவே அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் பெஞ்ச், நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்த இடங்களை, கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மூன்று வாரங்களுக்கு விசாரணையை தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை