ரேஷன் கார்டுக்கு ரேகை பதியாத 76 லட்சம் பேர்
சென்னை:தமிழகத்தில், முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் உள்ள, 3.56 கோடி உறுப்பினர்களில், 76 லட்சம் பேர் விரல் ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். இந்த பணிக்கு, மத்திய அரசு வழங்கிய கால அவகாசம், வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.உயிரிழப்பு, வெளிநாட்டுக்கு நிரந்தரமாக சென்றது உள்ளிட்ட காரணங்களால், கார்டுகளில் சிலரது பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. அதே சமயம், அவர்களுக்கு உரிய பொருட்கள், ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே, முன்னுரிமை, அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அனைத்து உறுப்பினரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்படுகிறது. இந்த பணிகளை, வரும் மார்ச் 31க்குள் முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் சரிபார்க்கப்பட வேண்டிய, 3.65 கோடி உறுப்பினர்களில், இதுவரை, 2.80 கோடி பேர் பதிவு செய்துள்ள நிலையில், 76 லட்சம் பேர் பதிவு செய்யாமல் உள்ளனர்.எனவே, மார்ச்சுக்கு பின் பதிவு செய்யாதவர்களுக்கு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி தொடர்ந்து கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.