சென்னை: விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்த, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது சாத்தியமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 2016 அக்., 20க்கு முன் உருவான மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதில், 2019 நவம்பர் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை அடிப்படையில், 2023 செப்., முதல், 2024 பிப்., வரை, ஆறு மாதம் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசத்திலும் இறுதி கட்டத்தில் தொழில்நுட்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் பலரும் விண்ணப்பிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்த, போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த பிப்ரவரியில் தொழில்நுட்ப பிரச்னை மற்றும் சில காரணங்களால், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாமல் போனது. இத்தகையோரின் நலன் கருதி, மனைகள் வரன்முறைக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மூன்று மாதம் அவகாசம் வழங்க வேண்டும். இதனால், அங்கீகாரமில்லாத மனைகளை வாங்கிய மக்கள், தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அரசுக்கும் உரிய வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு மீண்டும் அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்றார்.