சென்னை: சென்னையில் வரும் 30ம் தேதி முதல் செப்., 1 வரை நடக்க உள்ள, 'பார்முலா - 4' கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையில் தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ., நீள சாலைகளில், 42 கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டு டிச., 9, 10ம் தேதிகளில், பார்முலா - 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 'மிக்ஜாம்' புயல் காரணமாக, போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. அப்போட்டியை இம்மாதம் 30ம் தேதி முதல் செப்., 1 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த அனுமதி வழங்கினர். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை, 'கார் பந்தயத்தை சென்னையில் நடத்த அனுமதிக்கக்கூடாது' என, அரசு தலைமை செயலரிடம் மனு அளித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், சென்னையில் கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை தீவுத்திடலைச் சுற்றி, கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிடும்படியும், அ.தி.மு.க., கோரிக்கை வைத்து உள்ளது.
'யாரை மகிழ்விக்க இந்த பந்தயம்?'
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரிப் பேராசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர், வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், பதவி உயர்வு தராமல், தொகுப்பூதியம் கொடுக்கும் அளவுக்கு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு, அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், பார்முலா - 4 கார் பந்தயம் தேவையா? ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில், மின் வாரிய கடனை சமாளிக்க, மின் கட்டணத்தை மூன்று முறை ஏற்றி, அடித்தட்டு நடுத்தர குடும்பங்களை வதைத்துக் கொண்டு, இந்த பகட்டு போட்டி தேவை தானா? ஏற்கனவே ஒலிம்பியாட் சதுரங்க போட்டி நடத்தி, பல நுாறு கோடி ரூபாய் செலவில் விளம்பரங்கள் செய்து, தி.மு.க., அரசு சாதித்தது என்ன? இதனால், தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட ஒரு நன்மையை சொல்ல முடியுமா?உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்காக கார் பந்தயம் நடத்தினாலும், அதை இருங்காட்டுகோட்டை, சோழவரத்தில் உள்ள பந்தய திடலில் நடத்தலாமே. மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து, யாரை மகிழ்விக்க இந்த பந்தயம்?ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்கு, தகுதியான ஒரு வீரரைக் கூட உருவாக்க திறனற்ற அரசு, கார் பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத் துறை மேம்பட்டு விடுமா?கார் பந்தயம் நடத்தும் திட்டத்தை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.