சென்னை:இந்தியாவில் முதன்முறையாக, 'அக்னிகுல் காஸ்மோஸ்' என்ற தனியார் நிறுவனம் தன், 'அக்னிபான்' ராக்கெட்டை, சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அந்நிறுவனம் ஓராண்டிற்குள் அதிக எடை உடைய ராக்கெட் வாயிலாக, செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல், பல நிறுவனங்களும் விண்வெளி துறையில் களமிறங்க தயாராகி வருகின்றன. இதனால், இந்தியாவில் விண்வெளி துறையில் அதிக முதலீடும், வருவாயும் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.நம்நாட்டில், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மட்டுமே, ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் வாயிலாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. உலகளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள், விண்வெளி துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகின்றன. எனவே, இந்திய விண்வெளி துறையில், தனியார் நிறுவனங்கள் களமிறங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது.இந்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும், 'இன்ஸ்பேஸ்' எனப்படும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், விண்வெளி துறையில், தனியார் நிறுவனங்கள் ஈடுபட ஆலோசனை மற்றும் அங்கீகாரம் அளிக்கிறது.இதையடுத்து, விண்வெளி துறையில் ஈடுபட, 100 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் உட்பட, 150 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவான, 'அக்னிகுல் காஸ்மோஸ்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின், 'அக்னி பான்' ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, மே 30ம் தேதி காலை ஏவப்பட்டது.இந்த ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக, 5.6 கி.மீ., சென்றது. இது, '3டி பிரின்ட்டட்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட். மேலும், இதில் முதல் முறையாக, 'செமி கிரையோஜெனிக் இன்ஜின்' பயன்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன், விமான எரிபொருள், மண்ணெண்ணெய், திரவ ஆக்சிஜனை உள்ளடக்கியது.
அதிக வருவாய் கிடைக்கும்
இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவன் கூறியதாவது:அக்னிகுல் ராக்கெட் வெற்றிகரமாக அமைந்து உள்ளது. இது, இந்திய விண்வெளி துறையில், தனியார் நிறுவனங்களின் வருகையின் துவக்கமே. தனியார் நிறுவனங்கள், விண்வெளி துறைக்கு வரும் போது, ஒவ்வொன்றுக்கும் இடையில் போட்டி ஏற்படும். இதனால், குறைந்த செலவில் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த முடியும். தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும், இஸ்ரோ செய்கிறது. உலகளவில் விண்வெளி துறையின் சந்தை மதிப்பு, 250 பில்லியன் டாலராக உள்ளது. இது, வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்.இந்தியாவில் இருந்து குறைந்த செலவில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் போது, பல நாட்டு நிறுவனங்களும் இந்தியாவின் உதவியை நாடும். இதனால், இந்தியாவுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2022 இறுதியில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், 'விக்ரம் எஸ்' ராக்கெட்டை ஏவியது.
3 நாளில் ராக்கெட்டை வடிவமைக்கலாம்
இதுகுறித்து, அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவன ஆலோசகர் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சத்யாநாராயணன் ஆர். சக்கரவர்த்தி கூறியதாவது: அக்னிபான் ராக்கெட்டின் எடை, 500 கிலோ. இது, '3டி பிரின்டட்' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட். பொதுவாக, 1,000 உதிரிபாகங்களை ஒருங்கிணைத்து, ஒரு ராக்கெட் உருவாக்கும் போது, 3,000 வெல்டிங் செய்யப்படும். இதற்கு, மூன்று மாதங்களாகும். அதேசமயம், அக்னிபான் ராக்கெட், '3டி பிரின்டட்' முறையில் கணினி உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் மூன்று நாட்களில் ராக்கெட்டை வடிவமைக்க முடியும். அதைத்தான் அக்னிகுல் செய்தது.அக்னிபான் ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக, 5.6 கி.மீ., துாரம் பயணித்தது. அதிலிருந்த எரிபொருள், 65 வினாடிகளுக்கு எரிந்தது. சோதனை செய்வதற்காக அனுப்பப்பட்ட ராக்கெட் என்பதால், செயற்கைக்கோள் பொருத்தப்படவில்லை.முதல் முறையாக, 'செமி கிரையோஜெனிக்' எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. இது தவிர, அக்னிபான் ராக்கெட் ஏவ, இஸ்ரோ தனி ஏவுதளத்தை ஒதுக்கிஉள்ளது. அக்னிபான் ராக்கெட் வெற்றி பெற்றதை அடுத்து, செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்தும் ராக்கெட் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் சோதனை துவங்கிஉள்ளது.விரைவில் அவை ஒருங்கிணைக்கப்பட்டு, 15,000 கிலோ எடை உடைய ராக்கெட் வடிவமைக்கப்படும். இந்த ராக்கெட்டில் ஓராண்டிற்குள், செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். இதுவரை பல்வேறு நிறுவனங்கள், அக்னிகுல் நிறுவனத்தில், 300 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.