கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. நான்கு மாணவியர், 200க்கு 200 கட்- ஆப் பெற்று, முதலிடம் பிடித்துள்ளனர். வரும் 22ம் தேதி கலந்தாய்வு துவங்கவுள்ளதாக, துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார். நடப்பாண்டில், தமிழ்நாடு வேளாண் பல்கலை, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை, அண்ணாமலை பல்கலை ஆகியவற்றின் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒருங்கிணைந்து, வேளாண் பல்கலை சார்பில் நடத்தப்பட உள்ளது. வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகளில், 14 இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. கலந்தாய்வு மூலம், உறுப்பு கல்லுாரிகளில் 2,555 மாணவர்களும், இணைப்பு கல்லுாரிகளில் 2,806 மாணவர்களும், அண்ணாமலை பல்கலையின் கீழ் 340 மாணவர்களும், மீன்வளப் பல்கலையின் கீழ் 345 மாணவர்களும் சேர்க்கப்படவுள்ளனர். தரவரிசை பட்டியலை, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, நேற்று மதியம் வெளியிட்டார். மொத்தம், 33,973 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 29,969 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில், 11,447 பேர் மாணவர்கள்; 18,522 பேர் மாணவியர்.பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், ''இந்த ஆண்டு திவ்யா, ஷர்மிளா, மவுரின், நவீனா ஆகிய 4 மாணவியர், 200க்கு 200 'கட் - ஆப்' பெற்று முதலிடம் பிடித்து உள்ளனர். 8 மாணவர்கள் 199.50 மதிப்பெண்களும், 318 மாணவர்கள் 195 மதிப்பெண்களும், 1,123 பேர் 190 கட் - ஆப் மதிப்பெண்களும் பெற்று உள்ளனர். ''மொத்தம், 10,053 அரசு பள்ளி மாணவர்கள், தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில், 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ், 413 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி கலந்தாய்வு துவங்க உள்ளது,'' என்றார்.
வேளாண் படிப்பு ஏன்?
முதலிடம் பிடித்த விழுப்புரம் மாணவி சுபலட்சுமி கூறியதாவது:மருத்துவராக வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால், அதற்கு மதிப்பெண் போதவில்லை. அதற்கு அடுத்த நல்ல துறையாக வேளாண் துறையைப் பார்க்கிறேன். வேளாண் துறையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, பி.எஸ்சி., வேளாண் துறையை தேர்ந்தெடுத்துள்ளேன். பிளஸ் 2ல் வேதியியல், இயற்பியல், கணிதத்தில் சென்டம், பயாலஜியில் 99 மதிப்பெண் என 600க்கு 575 மதிப்பெண் பெற்றேன்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் போட்டிகள்
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவ பிரிவின் கீழ், 20 இடங்களுக்கு, 234 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், 413 இடங்களுக்கு, 10,053 பேரும் போட்டியிடுகின்றனர். விளையாட்டு பிரிவின் கீழ், 20 இடங்களுக்கு, 701 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 126 இடங்களுக்கு 84 பேரும், தொழில் பாடப்பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் 242 இடங்களுக்கு 1,900 பேரும் போட்டியிடுகின்றனர். சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் உரிய ஆவணங்களை தயார்நிலையில் வைக்க, பல்கலை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.