சென்னை:''வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டளிக்காமல் திரும்பியவர்கள் எத்தனை பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து நீக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விகளுக்கு, தேர்தல் கமிஷன் தெளிவாக பதில் அளிக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.கட்சி தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:தேர்தல் கமிஷன் தேர்தலில் சொதப்பி விட்டது; ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டளிக்க முடியாமல் திரும்பியவர்கள் எத்தனை பேர்; வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, ஓட்டுச்சாவடி சென்றபோது பெயர் நீக்கப்பட்டதாக திரும்பியவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விகளுக்கு, தேர்தல் கமிஷன் தெளிவாக பதில் அளிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு சதவீத குளறுபடி குறித்தும், தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிட வேண்டும். என் வீட்டில் என் மருமகள், மருமகன், பேரன் ஆகியோருக்கு ஓட்டு இல்லை. வாக்காளர்கள் பலர் பெயர் விடுபட்டது, அவர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டது. வரும் காலங்களிலாவது, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காமல், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சசிகலா ஒரு வெற்று காகிதம். சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் அத்தியாயம், இந்த தேர்தலோடு முடிந்து விடும். என் மகன் வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து, ஒரு நாள் கூட அவருக்கு பிரசாரம் செய்யவில்லை. பிரசாரம் செய்ததாக ஒரு புகைப்படம் காண்பித்தால், ஒரு கோடி ரூபாய் தருகிறேன். கோவையில் ஒரு லட்சம் ஓட்டுகளை காணோம் என, அண்ணாமலை கூறியிருப்பது, கிணற்றை காணவில்லை என, வடிவேல் காமெடி போன்றது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.